கேன்ஸ் 2023 | இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கண்ணீர் மல்க விடைகொடுத்த ஹாரிஸன் ஃபோர்டு

131 0

பிரான்ஸில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘இண்டியானா ஜோன்ஸ் 5’ படம் திரையிடப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஹாரிஸன் ஃபோர்டு கண்கலங்கியபடி மிகவும் உணர்வுப்பூர்வமாக பேசினார்.

உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் ஒவ்வொரு வருடமும் நடந்து வருகிறது. இந்தாண்டுக்கான 76-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 17-ம் தேதி தொடங்கியது. இதில், இந்தியா சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றுள்ளார். கோலிவுட், பாலிவுட் உள்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று கேன்ஸ் விழாவில் ஹாரிஸன் ஃபோர்டு நடித்த ‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ படத்தின் சிறப்பு திரையிடல் நடைபெற்றது. ஜேம்ஸ் மேங்கோல்ட் இயக்கியுள்ள இதுதான் ‘இண்டியானா ஜோன்ஸ்’ படவரிசையின் இறுதி பாகமாகும். 1981ஆம் ஆண்டு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான இதன் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்தது. அந்த படத்தில் நாயகனான நடித்த ஹாரிஸன் ஃபோர்டுக்கு அப்போது 39 வயது. தற்போது 80 வயதாகும் அவர் இண்டியானா ஜோன்ஸ் கதாபாத்திரத்துக்கு கேன்ஸ் விழாவில் கண்ணீர் மல்க விடைகொடுத்துள்ளார்.

‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ முடியும் போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று ஹாரிஸன் ஃபோர்டுக்கு ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டினர். அவரது சினிமா பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக மிக உயரிய ‘தங்கப் பனை’ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் ஹாரிஸன் ஃபோர்டு கண்கலங்கியபடி உணர்வுப் பூர்வமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நான் மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். நாம் சாகும்போது நாம் வாழ்ந்த வாழ்க்கை நம் கண் முன்னே வரும் என்று சொல்வார்கள். இப்போது என் வாழ்க்கை என் கண்முன்னால் நிழலாடுகிறது. என் வாழ்க்கை முழுவதும் அல்ல. வாழ்க்கையில் மிகச்சிறந்த பகுதி. என்னுடைய அன்பான மனைவி கலிஸ்டா ஃப்ளோக்ஹார்ட்டால் தான் என் வாழ்க்கை சாத்தியமானது. அவர் என் கனவு மற்றும் லட்சியத்துக்கு ஆதரவாக நின்றார். நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். ரசிகர்களாகிய உங்களையும் நான் மிகவும் நேசிக்கிறேன். நீங்கள்தான் என் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றினீர்கள். அதற்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

இவ்வாறு ஹாரிஸன் ஃபோர்டு கூறினார்.

‘இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்ட்டினி’ படம் வரும் ஜூன் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.