சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வருபவர்கள் தலைவர்களாக முடியாதா?

26 0

‘தம்பான’ என்றதும் நமக்கு ஆதிவாசி மக்களே நினைவுக்கு வருகின்றனர். இலங்கையில் ஆதிவாசி மக்களின் சந்ததிகள் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.  கதைகளின்படி, அவர்கள் குவேனி – விஜயன் தம்பதியின் இரு பிள்ளைகளான ஜீவஹத்த மற்றும் திசாலவின் வழிவந்தவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. 

தம்பான குணவர்தனய என்ற எழுத்தாளரினால் எழுதப்பட்ட ‘வேடுவர் மொழி’ என்ற நூலில் ஆதிவாசிகளின் வரலாறு பற்றி பகிரப்பட்டுள்ள தகவலில், அவர்கள் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.  அத்துடன், அவர்கள் யட்சர்களின் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் என்றும் அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தம்பான இளைஞரான வசந்த முதலிகே தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக வெளியான அவரை இழிவுபடுத்தும் கருத்துக்கள் பற்றியே இங்கு ஆராயப்படுகிறது.

வசந்த முதலிகே ‘வேடுவர்’ என்றும், அவ்வாறான ஒரு நபர் நாட்டின் எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் தலைவராக தன்னை நிலைப்படுத்திக்கொள்ள முடியாது என்பது போன்ற கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தன.

இந்த கருத்துருவாக்கத்தை சமூகமயப்படுத்தும் நோக்கில் வசந்த முதலிகே கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலுக்கு சென்றிருந்தார் என்றும், புரட்சிகர இயக்கம் ஒன்றை வழிநடத்தும் ஒருவர் அவ்வாறான இடத்துக்கு செல்ல முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அத்துடன், அவர் ஷங்க்ரி-லா ஹோட்டலில் இருந்த காட்சிகளும் திட்டமிட்டு பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

உண்மையில் அவர் ஷங்க்ரி-லாவுக்கு சென்றிருக்கவில்லை. மாறாக, அவர் வன்கோல்பேஸ் வணிக வளாகத்தில் அமைந்துள்ள ஓர் உணவகத்துக்கே சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்த முதலிகே என்ற கதாபாத்திரம் தொடர்பான சமூக உரையாடல்கள் உருவாக பிரதான காரணம், அவர் காலி முகத்திடல் ‘அரகலய’ போராட்டத்தில் ஆற்றிய மகத்தான பங்களிப்பாகும்.

இந்த பிரபல்யத்தையும், சமூக மாற்றத்துக்காக முயற்சிக்கும் மக்கள் தரப்பைச் சேர்ந்த ஓர் இளைஞரின் எழுச்சியையும் விரும்பாதவர்கள் மற்றும் பன்மைத்துவம் வாய்ந்த அரசியல் கருத்துருவாக்கங்களை சகித்துக்கொள்ள முடியாதவர்களுமே அவரை கடுமையாக விமர்சித்து அவதூறு பரப்புகின்றனர்.

இதன் அர்த்தம் ‘வேடுவன் வேடுவனாக மட்டுமே இருக்க வேண்டும். அவர்களால் பெருஞ்சமூகத்தின் தலைவராக முடியாது. இதற்கான உரிமை குறிப்பிட்ட சில தரப்புகளுக்கு மட்டும் உள்ளது’ என்பதாகவே அமைகிறது. இவ்விடயம் குறித்து நாம் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தோம். அவர்களின் கருத்துக்கள் பின்வருமாறு:

பிரபல சமூக செயற்பாட்டாளரான சந்துன் குடுகல இவ்விடயம் தொடர்பாக கூறியதாவது:

“இதுதான் காலி முகத்திடல் போராட்டத்தினால் நடந்த பெரும் மாற்றம். நாட்டை ஆள்கின்ற அரசியல்வாதிகளும் அவர்களின் வம்சத்தினரும் இதுவரை தங்களை எவராலும் அசைக்க முடியாது என்று நினைத்துக்கொண்டிருந்தனர்.  வசந்தவை எதிர்ப்பவர்கள் அரகலய காலத்தில்   செய்யத் தவறியதை நிறைவேற்றிக்கொள்ள தற்போது முயற்சிக்கின்றனர்.

அடுத்ததாக, அவரை ‘வேடுவர்’ என்று கூறுவதனூடாக முதலாளித்துவ வர்க்க மனப்பாங்கை வெளிப்படுத்த முயற்சிக்கின்றனர். அதாவது ‘தலைவர்’ என்று கூறப்படும் நபர் எம்மை விட பெரியவராக இருக்க வேண்டும். சாதாரண குடும்ப பின்னணியுடன் வருபவர்கள் தலைவராக முடியாது. அவ்வாறு ஒரு மாற்றம் நடைபெறுவதையும் இவர்கள் விரும்புவதில்லை.

வடக்கில் பிரபாகரனுக்கும் இதனையே செய்தனர். வசதி படைத்தவர்களும் ஏதோ ஒரு வகையில் சமூக பலத்தை கட்டியெழுப்பிக்கொண்டவர்களும் தான் கிராமங்களில் தலைவர்களாகின்றனர். இந்த முறைமை வசந்தவின் எழுச்சி, வீழ்ச்சியை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.

இங்கு இடதுசாரி இயக்கங்களுக்கும் கற்றுக்கொள்ள சில விடயங்கள் உள்ளன. பட்டினி கிடந்து செய்யும் அரசியல் அல்ல, இப்போதைய தேவை. இவ்வாறான இயக்கங்களுடன் இணைந்து செயற்படுபவர்களும் நல்ல ஆடைகளை அணிந்திருக்க வேண்டும். நன்றாக உண்ண வேண்டும். அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை நாம் மதிக்க வேண்டும்.

தம்பான கிராமத்தில் பிறந்த ஆதிவாசி பழங்குடிமக்களின் சந்ததியை சேர்ந்த முதலாவது பட்டதாரியும் ஆசிரியரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தம்பான குணவர்தன கூறியதாவது:

“தம்பான கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு செல்லும் இறுதி நபராக  வசந்த முதலிகே மட்டும் இருக்கப்போவதில்லை. தற்போது 15 பேர் இப்பகுதியிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளனர். எனினும், அவர்கள் இது பற்றி பேச விரும்பவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

ஒரு வகையில் இது நல்லது என்று நான் நினைக்கின்றேன். ஏனெனில், அவ்வாறு விமர்சனங்களும் எதிர்ப்புகளும் இல்லாவிட்டால், அவரால் இந்தளவுக்கு பிரபல்யம் பெற முடியாது” என தெரிவித்தார்.

ஊருவரிகே வன்னியலத்தோ தம்பானயைச் சேர்ந்த ஆதிவாசி மக்களுக்கு மட்டுமன்றி, நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆதிவாசிகளுக்கும் தலைவர் ஆவார். வசந்த முதலிகேவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பொன்றை நடத்தியதற்காக அவருக்கும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதற்காக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது.

வசந்த முதலிகேயை பற்றியும், சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்  தொடர்பிலும் அவர் கூறுகையில்,

“வசந்தவின் தாயார் எங்களுக்கு நெருங்கிய உறவுமுறை உள்ள ஒருவர். அவர் சிங்களவர் ஒருவரை மணமுடித்தார். அவர்களின் பிள்ளை தான் வசந்த முதலிகே. ‘அரகலய’ போராட்டத்துடன் அவர் நாட்டில் பிரசித்தி பெற்ற ஒருவரானார்.

போராட்டத்தை வயலில் செய்ய முடியாது. அதற்கு அரகலய நடக்கும் இடத்துக்கு தான் செல்ல வேண்டும். அதைத்தான் அவரும் செய்தார்.

எங்கள் பகுதிகளில் ஒரு கதை சொல்வார்கள், ‘ஒரு பேய் தொற்றிக்கொண்டால் மற்ற பேய்களும் தானாகவே வந்துவிடும்’ என்று. (ஆதிவாசிகள் பேய்களின் ஆக்கிரமிப்பினால் தான் நோய்கள் வருவதாக கருதுகின்றனர்). இதனால் அவருக்கு ஒரு பேய் தொற்றியதும்   மற்றைய பேய்களும் வந்துவிட்டன. அதுதான் இங்கு நடந்திருக்கின்றது. அவரை சேர்ந்தவர்கள் என்ற வகையில் நாம் அவருக்காக பேச வேண்டியது அவசியம்” என்றார்.

உப்புல் ஏக்கநாயக்க தம்பான பகுதியை பிரதிநிதித்துவம் செய்து மகியங்கன பிரதேச சபைக்கு நான்கு தடவைகள் தெரிவானவர். உப்புலின் தாயாரும் ஆதிவாசி சந்ததியைச் சேர்ந்தவர். உப்புலின் கருத்துப்படி, வசந்த முதலிகே தம்பான பகுதிக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒருவர் ஆவார்.

அவர் கூறியதாவது:

“எங்களால் செய்ய முடியாததை வசந்த முழு நாட்டுக்கும் செய்துள்ளார். அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் அவருக்கு எமது ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்காக நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம்” என்றார்.

தம்பான கனிஷ்ட வித்தியாலயம் 1946ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் உள்ளடக்கப்பட்ட பெயர்ப் பட்டியலில் இரண்டாவது பெயராக டபிள்யூ.எம். லொக்கு பண்டாவின் பெயர் அமைந்துள்ளது.

லொக்கு பண்டாவின் பெயர் பின்பு தம்பான வரலாற்றில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. அதற்கு காரணமாக அப்பாடசாலையில் கல்வி கற்று அரச சேவையில் இணைந்துகொண்ட முதலாவது நபர் என்ற பெருமைக்குரியவராக அவர் இருக்கின்றார்.

அவர் கூறியதாவது:

“அன்றிலிருந்தே வேடுவர்கள் என்ற வேறுபாடு எங்களுக்குள் இருந்ததில்லை. நாங்கள் ஒன்றாகவே உணவு உட்கொண்டோம், விளையாடினோம். இன்றும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

இப்பொழுது எமது குடும்பத்தினருடன் வேடுவர் இன பெண்கள் விவாகம் செய்து உறவுகளைப் பேணி வருகின்றனர்.

சிங்களவர்களா அல்லது வேடுவர்களா என்ற கேள்விக்கு இங்கு இடமில்லை. இங்கு மனித நேயம் தான் முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த பிரச்சினையை வெளி நபர்கள் தான் உருவாக்குகின்றனர். நாடு ஒன்றுபடுவதை தடுப்பது தான் அவர்களின் நோக்கமாக உள்ளது.

யாராக இருந்தாலும், மனிதர்கள் மனிதர்கள் தான்.-எமக்குள் வேற்றுமைகள் எதுவும் தேவையில்லை. அப்படிச் செய்பவர்கள் மனித நேயமற்றவர்களாகவும், சமூகத்தை வெறுப்பவர்களாகவுமே கருதப்படுவார்கள்.

வசந்த முதலிகேயின் செயற்பாடுகளை மனித உரிமை பாதுகாவலர் ஒருவரின் செயற்பாடுகளாகவே நாங்கள் காண்கின்றோம். அது மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்துக்கேற்ப மனித உரிமைகள் பாதுகாவலர்களின் கடமையாகவே கருதப்படுகின்றது” என்றார்.

இவ்விவகாரம் தொடர்பாக வசந்த முதலிகே  கருத்து தெரிவிக்கையில்,

“யார் எப்படி அவமானப்படுத்தினாலும்-நாங்கள் எப்பொழுதும் மக்களின் பக்கமே.

அரசாங்கம் எம்மை கைது செய்து, எம்மை அவமானப்படுத்தி, எங்களுடன் இருந்த மக்களை தூர விலத்திவைக்கப் பார்க்கின்றது. நான் இன்னும் பல்கலைக்கழக பட்டம் பெறவில்லை என்கின்றனர். தம்பான ஆட்கள் பச்சை இலை குலை ஆடைகளை உடுத்திக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியாது. யார் என்ன சொன்னாலும் பல்கலைக்கழகத்தில் வன்முறைகள் அதிகம் நடைபெறுவது போல் வதந்திகளும் நன்கு பரப்பப்படுகின்றன.

இவற்றைப் பற்றி வெளிப்படையாகப் பேசினால், அரசியல் பேசுவதாக கூறுவார்கள். நாங்கள் இந்த நாட்டின் ஒரு தரப்பு மக்களுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றோம் என்று கூறப்பட்டாலும், எங்களுக்கு பிரச்சினை இல்லை. நாங்கள் நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்காகவே பேசுகின்றோம். ஆனால், அர்த்தமற்ற முறையில் வன்மமான முறையில் நாட்டு மக்களின் பிரச்சினை பற்றி பேசுவது பற்றியும், அதற்காக முன்னிற்பது குறித்தும் குறை கூறுதல், சேறு பூசுதல் என்பனவற்றை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை. உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு நாங்கள் வன்கோல்பேஸ் கடைத்தொகுதிகளுக்கு சென்றிருந்தோம். நாங்கள் அரகலய காலத்திலும் அவ்வாறு செய்தோம். அங்கு சென்று அங்குள்ளவர்களுடன் பேசினோம். நாங்கள் ஐஸ்கிறீம் சாப்பிட்டோம். இதையும் பயன்படுத்தி எங்கள் மீது சேறு பூச முயற்சிப்பது மக்களை எங்களிடமிருந்து பிரித்து வைக்க எடுக்கும் சூழ்ச்சியாகும்.

இப்பொழுது அரசாங்கம் அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளது. கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை நடத்தி மக்களை கொலை செய்யும் நிலைக்கு வந்துள்ளது. வரிக்கு மேல் வரியை விதித்து மக்களின் கழுத்தை நெரித்துள்ளது. அவற்றை மூடி மறைக்க சிறுபிள்ளைத்தனமான வேலைகளால் முடியாது. அதனால், யார், என்ன வேண்டுமானாலும்  செய்யட்டும். நாங்கள் மக்கள் பக்கமே இருக்கின்றோம்” என்றார்.

“அனைவருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது என்பதனை அங்கீகரிக்கும் சமூகத்தில் இவ்வாறான பாரபட்சங்கள் கவலைக்குரியதாகும்” என்று இலங்கை இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்த கலாநிதி டிலந்த விதானகே கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிங்கள இனம் உருவாவதற்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்த ஆதிக்குடிகளாகவே இந்த ஆதிவாசிகள் கருதப்படுகின்றனர். அவ்வாறான ஒரு கருத்து இருக்கும் நிலையில், நாம் எப்படி அந்த இன மக்களை குறைத்து மதிப்பிட முடியும். அதனால் இவ்வாறான கதைகள் முன்னேறாத சமூகத்திலிருந்து வந்தவை என்றே கருத வேண்டியுள்ளது” என்றார்.

ஜனநாயகமற்ற சமூகங்களில் தனிநபர்களை தாக்குவதற்கு இவையெல்லாம் ஆயுதமாக பிரயோகிக்கப்படுகின்றன என்று பேராசிரியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிட்டார். இலங்கையின் சமூக அரசியல் தொடர்பு நிலைகளில் தனிநபர்களை தாக்குவதற்கென ஒருவரின் பிறப்பு, குடும்ப பின்னணி, ஆண் பெண் நிலை, பாலியல் நோக்கு, வயது ஆகிய விடயங்கள் ஆயுதமாக பிரயோகப்படுத்தப்படுகின்றன. இதனை எமது நாட்டில் பரவலாக காண முடியும்.

மனிதர்களின் மோசமான மனநிலையை இந்த செயல்கள் வெளிப்படுத்துகின்றன. சஜித் பிரேமதாஸ மற்றும் ரணசிங்க பிரேமதாஸவுக்கு எதிராகவும் கூட இவ்வாறான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரிபால சிறிசேன அவரது பாலியல் நோக்கினை அடிப்படையாக வைத்து ‘சமனலயா’ என்று விமர்சித்திருந்தார்.  இவை முன்னேறாத சமூகத்தின் அநாகரிகமான வெளிப்பாடுகளாகும்.

நிமல் அபேசிங்க