கொலம்பிய விமானவிபத்து – 16 நாட்களின் பின்னர் 11 மாத குழந்தை உட்பட நான்கு சிறுவர்கள் உயிருடன் இருப்பதாக தகவல்

166 0

அமேசனில் கொலம்பிய விமானமொன்று விழுந்து நொருங்கிய விபத்தில் உயிர்தப்பிய நான்கு   சிறுவர்கள் இரண்டுவாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானத்தில் தங்கள் தாயையும் குடும்பத்தவர்களையும் இழந்த நான்கு சிறுவர்களே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

சிறுவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக  கொலம்பிய அரச அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

அமேசனின் மழைக்காட்டில் உள்ள பூர்வீககுடிகளே இந்த சிறுவர்களை உயிருடன் மீட்டுள்ளனர்.

எனினும் மீட்புபணியில் ஈடுபட்டுள்ள படையினர் இன்னமும் சிறுவர்களை பார்க்கவில்லை என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்கொலம்பியாவில் அமேசன் காடுகளிற்கு மேலாக பறந்துகொண்டிருந்த விமானம் மே முதலாம் திகதி காணாமல்போனது.விமானத்தின் இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக  விமானி அறிவித்திருந்தார்.

பின்னர் விபத்து இடம்பெற்ற பகுதியில் நான்கு சிறுவர்களினது தயாரினது சடலமும் விமானிகளின் சடலமும் மீட்கப்பட்டதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் 13, ஒன்பது நான்கு வயது மற்றும் 11 மாதம் ஆன குழந்தை உட்பட்ட சிறுவர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்பட்டது.

எனினும் அவர்கள் உயிர்தப்பியுள்ளனர் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

மோப்பநாய்கள் சிறுவர்கள் பயன்படுத்தும் சில பொருட்களை அடையாளம் கண்டிருந்தன.

மரங்கள் குச்சிகளை வைத்து தற்காலிகமாக கட்டப்பட்ட தங்குமிடம் ஒன்றையும் மீட்பு குழுவினர் கண்டுபிடித்திருந்தனர்.

விமானத்திலிருந்த சிறுவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள் என நாங்கள் கருதுகின்றோம்,பல இடங்களில் தடயங்களை அவதானித்துள்ளோம்,அவர்கள் தங்கவைக்கப்படிருக்ககூடிய இடத்தையும் கண்டுபிடித்துள்ளோம் என இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் காட்டிற்குள் உள்ளே சென்றுவிடலாம் என்ற அச்சம் காரணமாக அவர்களின் பாட்டியின் செய்தியை பதிவு செய்து அதிகாரிகள் ஹெலிக்கொப்டரில் ஒலிபரப்பிச்சென்றனர்- பாட்டி தனது பிள்ளைகளை ஒரே இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளும் செய்தி அது.

கடும் மழை காரணமாக தேடுதல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

எனினும் உள்ளுர் மக்கள் சிறுவர்களை கண்டுபிடித்துள்ளனர் என்ற தகவல் கொலம்பிய ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாக சிறுவர் நலம் தொடர்பான கொலம்பிய நிறுவகம் தெரிவித்துள்ளது.

கொலம்பிய ஜனாதிபதியும் இதனை உறுதி செய்துள்ளார்.