கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட நடமாடும் சேவை

173 0

நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம்  திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை தளமாகக் கொண்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக   நீதியமைச்சின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டுப் பிரிவின் உதவிச் செயலாளர் சந்தமாலி பிரதாபசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தெளிவுப்படுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

வடமாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கடந்த காலங்களில் வட மாகாணத்தில் மூன்று விசேட நடமாடும் சேவைகள் இடம்பெற்று யுத்தம் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறி மீளவும் இந்தியாவில் இருந்து வந்த மக்களின் பிரச்சினைகள் உட்பட பல்வேறு  பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

இதற்கிடையில் அனைத்து கிராமப்புற சேவை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் தேசிய நல்லிணக்க சகவாழ்வு குழுக்களை நிறுவ நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விசேட நடமாடும் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  திருகோணமலை  மாவட்ட நடமாடும் சேவை எதிர்வரும்  26ஆம்  திகதி திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்திலும், 27ஆம் திகதி மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகத்திலும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட மக்களும் இந்த நடமாடும் சேவைகள் மூலம் வழங்கப்படும் வசதிகளை திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மையங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடியும்.

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களைப் பெறுதல், தேசிய அடையாள அட்டைகள், காணி மீள்குடியேற்றப் பிரச்சினைகள் தொடர்பில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மக்கள் இந்த நடமாடும் வேலைத்திட்டத்தின் ஊடாக பயன்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு,ஆட்பதிவுத் திணைக்களம்,

பதிவாளர்  திணைக்களம், வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவு, பாதுகாப்பு அமைச்சு, வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு,

மாகாண காணி ஆணையாளர் அலுவலகம், குடிவரவுத் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் பங்குபற்றவுள்ளனர்.

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட செயலக மட்டத்தில் திரைப்படத் திரையிடல் நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் முதல் காட்சி  26 ஆம் திகதி முற்பகல் 11.00 மணிக்கு திருகோணமலை மாவட்டச் செயலக வளாகத்தில் நடைபெறவுள்ளது என்றார்.