எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள்!

141 0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக வகும்பர தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (18) நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த கடுமையான தீர்மானங்கள் வெற்றிப்பெற்றுள்ளன.

பாரிய நெருக்கடியில் இருந்து நாடு குறுகிய காலத்துக்குள் மீண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சிறந்தது என்பதை நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுவது அடிப்படையற்றது. கட்சி என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.

புதிய ஆளுநர் நியமன விவகாரத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. எமக்கு சார்பானவரை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் குறிப்பிடவுமில்லை. ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.அதனடிப்படையில் சிறந்த தகுதியானவர்களை நியமித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் ஒன்றிணைவார்கள். அமைச்சரவை அமைச்சுக்களை விரிவாக்கும் சாத்தியம் ஏதும் தற்போது கிடையாது. இருப்பினும் இராஜாங்க அமைச்சுக்கள் விரிவுப்படுத்தப்படலாம் என்றார்.