பெலியத்த மற்றும் வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த இருவர் நேற்று புதன்கிழமை (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 16ஆம் திகதி பெலியத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரதுவ பிரதேசத்தில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் 33 வயதுடைய கலகம கிழக்கு, நாகுளுகமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், இந்த தாக்குதலின் போது உயிரிழந்தவர் சந்தேக நபரின் உறவினர் என்பதுடன், தாக்குதலை மேற்கொண்டுவிட்டு குறித்த நபர் தலைமறைவாகி இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் தங்கல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தலை பகுதியில் உள்ள மர ஆலையொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பிலியந்தல, பொல்கஸ்வோவிட்ட பிரதேசத்தில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் 44 வயதுடைய கரவினாடிய, பலங்கொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
உயிரிழந்தவரும் சந்தேக நபரும் குறித்த மர ஆலையில் ஒன்றாக பணி புரிந்துள்ளதுடன் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார் என்பதோடு, வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

