ஈகத்தின் மேடு முள்ளிவாய்க்கால்!- இரா. செம்பியன்-

99 0


மடைகள் திறந்து
ஊர் புகுந்தன
பிணம் தின்னிகள்…!

செங்களத்தில்
உயிர் கொடுத்து
சிங்களத்தின்
சிரம் சிதைத்து
அவதாரம் கொண்டன
எமக்கான காவல்
தெய்வங்கள்…!

துஞ்சிடல் தவிர்த்து
தோள்கொடுத்து
எழுந்தன
பெருவீரப்
படையணிகள்!

தேசமெங்கள் தேசமென
வீரம்விளை பூமியென
மானமற வேங்கையவர்
காவலரணாய்
காப்பரணாய்
நிமிர்ந்து நிற்க…

அறத்தை அங்கு
வேரோடு அறுத்து
மனிதத்தை அந்த
மண்மேட்டில்
புதைத்து….

பன்னாட்டு ஆதரவில்
பேயாட்டமாடின
பிணம் தின்னி
சிங்களக் கூட்டம்…!

வளம் நிறை எம்
திருநாட்டின்
பசுமைபூத்த
எழில் வதனத்தின்
இருப்பிடமாம்
முல்லைமண்
கந்தகத் தீயால்
கருக்கப்பட்டது…!

குடிசைகள் எரித்து
குருதிகள் குடித்து
அவலத்தின் குரலை
ஆனந்தமாய் ரசித்து
திமிர்கொண்டு ஆடின
அடங்கா வெறியர்…!

நெருப்பாகி எரியும்
கொடிய வெயில்…
அதனிலும் கொடிய
சுவாலையாய் எழும்
வயிறொட்டிய பசி…!

கஞ்சிக்காய்
காத்திருப்பு…
அங்கும்
கயவர்களின்
குண்டுகளால்
சிதையுண்ட
வெற்றுடல்கள்..!

நாளை நமதென்ற
நம்பிக்கையை
வேரோடு அழிப்பதாய்
கீறிக் கிழித்தன
வாழும் சிறிசுகளை…!

நீழும் இனவழிப்பில்
பாழும் படைநடத்தும்
ஈனர் படைத் தலைமை
ஈரமற்ற இதயம்
கொண்டே
இறுமாந்து
நெருப்பெரிக்க
நந்திக்கலே
பற்றியெரிந்தது…!

இனமொன்று உலகில்
நிலைவென்று
நிமிர்ந்திட
எதையங்கு ஈகமாய்
ஈடேற்ற வேண்டுமோ
அதையெல்லாம்
தாண்டியே
பன்மடங்காய்
ஈர்ந்திட்ட இடமாக
நின்றது
முள்ளிவாய்க்கால்.

– இரா.செம்பியன்