கூட்டு விசாரணை சபையை அமைக்குக- அத்துரலிய தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

287 0

குற்றங்களுக்கான விசாரணைகளின் போது இராணுவ அதிகாரிகள் அல்லது இராணுவ வீரர்கள் ஆகியோரில் யாரையாவது ஒருவரை கைது செய்வதற்கு முன்னர், அவர்கள் சந்தேகநபர்களா? என கண்டறிவதற்கு முப்படையினரிலிருந்து கூட்டு விசாரணை சபையொன்றை அமைக்குமாறு தான் ஜனாதிபதியிடம் வேண்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் எனத் தெரிவித்து புலனாய்வுத் துறை அதிகாரிகளை கைது செய்வதன் மூலம் நாட்டையும், ஜனாதிபதியையும் ஆபத்தான நிலைக்கு இட்டுச் செல்லும் பணியை முன்னெடுப்பதில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சிலவும், சில பொலிஸ் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். இதனாலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளேன்.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தேசத் துரோகிகள் எனவும், இவ்வாறானவர்களை ஊர், பெயர்களுடன் விரைவில் வெளியிடுவோம் எனவும் தேரர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களை கைது செய்வதற்கு முன்னர், சபாநாயகரை அறிவுறுத்த வேண்டும் என்பது போல், இராணுவத்தினரை கைது செய்யும் போது இராணுவத் தளபதிக்கு அறிவிக்க வேண்டும் எனவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்