உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

70 0

 ‘இன்று உலகமே இந்தியாவை நம்பிக்கையோடு பார்க்கிறது’ என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

கோவை எட்டிமடையிலுள்ள அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் ‘ஒருங்கிணைந்த உலகத்துக்கான தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு’ குறித்த 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: ஜி20 தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் இந்தியாவுக்கு அதன் சிறப்பான பாரம்பரியத்தின் அடிப்படையில் கொள்கை பரிந்துரைகளை வழங்குவதற்கு இதுவொரு சிறப்பான வாய்ப்பாகும். அனைத்து படைப்புகளிலும் இறைவன் ஒருவனே இருப்பதையும், படைத்தவனுக்கும், படைக்கப்பட்ட வைக்கும் இடையே வேறுபாடு இல்லை என்பதையும் நமது முனிவர்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்தனர். இந்தியாவுக்கே உரிய இந்த தனித்துவமான அனுபவத்தையும் மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வையும் ஒட்டுமொத்த உலகின் அனைத்து மனிதர்களுக்கும் நாம் கொண்டுபோய் சேர்ப்பது அவசியம். இன்று உலகமே நம்பிக்கையோடு நம்மை எதிர்நோக்குகிறது.

பெண்களின் ஆற்றலைப் பயன்படுத்தாமல் எந்தவொரு நாடும் வளர்ச்சியை அடையாது. பல நூறாண்டுகளாக தமிழ்நாட்டில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை சமீபத்திய வாக்காளர் பட்டியல் திருத்தம் வெளிப்படுத்தியிருக்கிறது.

2014-ல் 500-க்கும் குறைவான ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இந்தியாவில் இருந்த நிலையில், இன்று அவற்றின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவின் தனிச்சிறப்பான வெற்றிக் கதைகளை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துசெல்லவும் மற்றும் உலகை சிறப்பான வாழ்விடமாக மாற்றவும் இந்நிகழ்ச்சி உதவும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு குறித்து பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பேசினர்.

இந்திய பிரதமர் அலுவலகத்தின் தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் ராஜேஷ் பன்ட், மாதா அமிர்தானந்தமயி மடத்தின் துணைத்தலைவர் சுவாமி அம்ரிதா ஸ்வரூபானந்தபூரி, ஐ.நா. பொதுச்செயலரின் முன்னாள் சிறப்பு ஆலோசகர் விஜய் நம்பியார், அம்ரிதா விஸ்வ பீடத்தின் துணைவேந்தர் டாக்டர் வெங்கட்ரங்கன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாநாடு இன்று நிறைவடைகிறது.