திமுக அமைச்சர்கள் 21 பேரின் ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் – அண்ணாமலை அறிவிப்பு

111 0

 திமுக அமைச்சர்கள் 21 பேரின் ஊழல் பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த முறை திமுக நிர்வாகிகள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டேன். ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடி மதிப்பில் சொத்து வைத்துள்ளனர். அவர்களின் முதல் பிரமாண பத்திரம் மற்றும் கடைசியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் இருக்கும். அந்த கூடுதல் தொகை அவர்களுக்கு எப்படி வந்தது? அவர்களின் கடைசி பிரமாண பத்திரத்தில் 80 சதவீத சொத்துகள் இடம்பெறவில்லை. அதை ஆய்வு செய்தால் ஊழல் வெளியில்வரும்.

‘திமுக ஃபைல்ஸ் – பாகம் 2’ ஜூலை முதல் வாரத்தில் வெளியிட இருக்கிறேன். அதில் 21 திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் இடம்பெறும். ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் திமுக அமைச்சர் எவ்வளவு பெற்றிருக்கிறார் என்ற விவரமும் அதில் இடம்பெறும். 3-ம் பாகமும் வெளியிடப்படும்.

திமுக அரசில் அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி வருபவரும், மத்திய அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டவருமான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் பதவிகொடுத்திருப்பது நகைப்புக்குரியது. ஆடியோ வெளியான விவகாரத்தால் தான் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றம் செய்யப்பட்டார். இதில் பழனிவேல் தியாகராஜன் மீது எந்த தவறும் இல்லை.