தகுதியானவர்களுக்கு மாத்திரமே இனி அரச நலன்புரி கொடுப்பனவுகள்

101 0

நடுத்தர மக்களுக்கு வழங்கும் நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

நலன்புரி கொடுப்பனவுகள் வெளிப்படை தன்மையுடன், தகுதி வாய்ந்த தரப்பினரை இலக்காக கொண்டதாக அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் மாதம் முதல் 22 இலட்ச பேருக்கு (குடும்பங்கள்) நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அஷ்வசும் நலன்புரி கொடுப்பனவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில்  மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலை காணப்படுகிறது. நிவாரணம் பெற  தகுதியுள்ளவர்கள் அரசியல் காரணிகளுக்கு அமைய நீக்கப்படுவதும், தகுதியற்றவர்களுக்கு அரசியல் காரணிகளுக்கு அமைய நிவாரண கொடுப்பனவு வழங்கப்படுவதும் சர்வதேச மட்டத்தில் பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

நாட்டு மக்களின் வரிப்பணம் முறையற்ற தரப்பினருக்கு அரச நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படுவது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் போது பிரதான விடயமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆகவே அரச நலன்புரி கொடுப்பனவுகளின் இனி வெளிப்படை தன்மையும்,உண்மை தன்மையையும் பேணுவதற்கு அரசாங்கம் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

2002 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க நலன்புரி கொடுப்பனவு தொடர்பான சட்டம்  காலத்துக்கு ஏற்ப திருத்தியமைக்கப்படவில்லை. இதற்கமைய இந்த சட்டத்தை திருத்த அரசாங்கம் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்ப கட்ட நடவடிக்கை முன்னெடுத்தது. ஆறு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்தது.

அரசாங்கம் முன்வைத்த 22 காரணிகளை உள்ளடக்கிய வகையில் நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டது. பல்வேறு தரப்பினரிடமிருந்து போதுமான விண்ணப்பம் கிடைக்காத காரணத்தினால் மூன்று தடவைகள் விண்ணப்பம் செய்வதற்கான காலவகாசம் நீடிக்கப்பட்டது.இதற்கமைய சுமார் 37 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

37 இலட்ச விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் மற்றும் அரசாங்கம் கோரிய 22 காரணிகள் தொடர்பில் பிரதேச  செயலாளர் பிரிவுகள் ஊடாக ஆராயப்பட்டன. இதற்கமைய 37 இலட்ச விண்ணப்பங்களில்  33 இலட்ச விண்ணப்பங்கள் மீள்பரிசீலனை செய்யப்பட்டன. முழுமையான தரப்படுத்தலுக்கு அமைய 22 இலட்சம் பேருக்கு  (குடும்பங்கள்)    நலன்புரி கொடுப்பனவு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

குடும்ப மற்றும் தனி நபர் என்ற அடிப்படையில் இவ்வாறு நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.நிலைமாறக்கூடிய தன்மையில் உள்ள நான்கு இலட்ச குடும்பங்களுக்கு  எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை 2500 ரூபா,அவதான தரப்பில்  உள்ள  4 இலட்ச குடும்பங்களுக்கு எதிர்வரும் 2024.03 மாதம் வரை 5000 ரூபா, ஏழ்மை நிலையில் உள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு  மூன்று வருட காலங்களுக்கு  8500 ரூபா, மிக ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு 15,000 ரூபா என்ற அடிப்படையில் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.

அத்துடன் தனிநபர் என்ற அடிப்படையில் மாற்றுத்திறனாளிகள்,நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதம் 5000 ரூபா,வயோதிபர்களுக்கு மாதம் 2000 ரூபா என்ற அடிப்படையில் எதிர்வரும்  இரு மாதத்துக்குள் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படும்.

குடும்ப நிலை,மாத வருமானம் மற்றும் வாழ்க்கை செலவுகள் தொடர்பில் புள்ளிவிபரவியல் திணைக்களம் கடந்த 2019 ஆம் ஆண்டு  நியமைச்சிடம் சமர்ப்பித்த மதிப்பீட்டு அறிக்கை,2022 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் காணப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றை அடிப்படைபாக கொண்டு நிவாரண கொடுப்பனவு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய தரப்படுத்தலுக்கு அமைய தகுதி உள்ளவர்கள் நிவாரண கொடுப்பனவு தொகையை பெற்றுக்கொள்வதில் இருந்து நீக்கப்பட்டிந்தால் அவர்கள் பிரதேச செயலாளர் ஊடாக மேன்முறையீடு செய்யலாம் அத்துடன் தகுதியற்றவருக்கு நலன்புரி கொடுப்பனவு வழங்கப்படுமாயின் அவர்கள் தொடர்பில் பிரதேச செயலாளர் பிரிவில் முறைப்பாடு செய்யலாம்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நடுத்தர மக்களுக்கு வழங்கும் நலன்புரி கொடுப்பனவுகளை நடைமுறைக்கு சாத்தியமான வகையில் அதிகரிக்குமாறு சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. வழங்கப்படும் நலன்புரி கொடுப்பனவுகள் வெளிப்படை தன்மையுடன்,தகுதி வாய்ந்த தரப்பினருக்கு மாத்திரம் வழங்கப்பட வேண்டும் என கட்டாயமாக வலியுறுத்தியுள்ளது. ஆகவே இனி தகுதி உள்ள தரப்பினருக்கு மாத்திரமே நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றார்.