ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையில் முதல் நாள் சந்திப்பில் பேசப்பட்டது என்ன ?

146 0

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக இடைநிறுத்துமாறும் இதுபற்றி கலந்துரையாடி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் வரையில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக் கூடாது என்றும் வியாழக்கிழமை (11)  நடைபெற்ற ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போது ஜனாதிபதியினால் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, அதிகார பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் முதலாம் நாள் பேச்சு வியாழக்கிழமை (12) நடைபெற்றது.

இப் பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விவகாரம், காணி பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நல்லிணக் ஆணைக்குழு என்பன உள்ளடங்கலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆளும் தரப்பில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர்,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவபடுத்தும் தமிழ்த் தரப்பில் இலங்கைத் தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஆர்.சம்பந்தன் எம்.பி., ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் எம்பி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் பங்காளிக்கட்சிகளின் பாராளுமன்ற பிரதிநிதிகளான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரன் எம்பி, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் ஆகியோரும் புளொட் தலைவர் சித்தாந்தன் எம்பியும் பங்கேற்றனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவி விக்னேஸ்வரனும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சந்திப்பு தொடர்பில் ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கூறுகையில்,

வடக்கு, கிழக்கு மக்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பந்தமாக பேசப்பட்டது. குறிப்பாக தொல்பொருள், வன ஜீவராசிகள், வன பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்டவர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கியமாக கவனம் செலுத்தப்பட்டது.

தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அடுத்து வரும் காலத்தில் பிரச்சினைகளுக்கு தீர்வினை காண வேண்டும். அதற்கு எமது தரப்பில் பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதேநேரம், பயங்கரவாத தடைச் சட்டத்தினை முழுமையாக நீக்குமாறும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியிருந்தார்கள் அதன் போது எனது நிலைப்பாட்டினை தெளிவு படுத்தினேன்.

சர்வதேச நாடுகளில் இந்த சட்டம் காலத்தின் தேவை கருதி உள்ளது. ஆகவே நியமங்களுக்கு அமைவாக அது திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்று கூறினேன். இந்நிலையில் தமிழ் உறுப்பினர்கள் தற்போது கைகூடிவந்துள்ள சூழலை மீண்டும் தவறவிட்டு விடக் கூடாது என்றார்.

இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன்

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறுகையில்,  மக்கள் முகம் கொடுக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டு ஜனாதிபதி தலைமையில் அவற்றுக்கான தீர்வினை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதற்கான சந்தர்ப்பமாக இந்த பேச்சுவார்த்தையை பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகின்றது.

மதிநுட்பத்தினை பயன்படுத்தி நகர்வதால் மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியான தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். அதற்காக நாம் தொடர்ந்து அர்ப்பணிபோடு செயல்பட உள்ளோம் என்றார்.

சுமந்திரன் 

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் கூறுகையில், காணி விவகாரத்தை பொருத்தமட்டில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் பற்றி விசேடமாக சுட்டிக் காட்டினோம்.

எமது கருத்துக்களை செவிமடுத்தன் பின்னர் கடந்த இரண்டு வருடகாலத்தில் பல்வேறு தவறான விடயங்களைச் செய்திருப்பதாக ஏற்றுக்கொண்ட தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அவற்றை தற்போது திருத்துவதாக குறிப்பிட்டார்.

ஆனால், திருத்துவதற்கு முன்னதாக அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.

அதன் படி கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்று வரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறும் உரையாடி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்படும் வரையில் ஏதுவித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கக்கூடாது என்றும் ஜனாதிபதியினால் தொல்லியல் திணைக்களப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

அதேபோன்று வடக்கு கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களை பொருத்தமட்டில் கடந்த 1985 ஆம் ஆண்டு வரைபடத்துக்கு மீண்டும் செல்ல முயல்வதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அடுத்ததாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு ஒரு விவகாரம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும் இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்று நாம் சுட்டிக் காட்டினோம்.

அதற்கு பதில் அளித்த காணாமல்போனவர் பற்றி அலுவலக அதிகாரிகள் தாம் உரிய தரவுகளைத் தயாரித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்குவதாக கூறினார்.

மேலும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலத்தை இத்தகைய புதிய சட்டமன்ற அவசியமில்லை என்று நானும் சி.வி. விக்னேஸ்வரனும் எடுத்துரைத்தோம் பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினோம் என்றார்.

செல்வம் அடைக்கலநாதன் 

இதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. கடந்த காலத்திலும் நாம் எமது மக்களின் இந்த பிரச்சினைகளை முன்வைத்தபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த அதே கருத்துக்களையே மீண்டும் தெரிவிக்கின்றார்.

அவர் எமக்கு ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக எந்த விடயங்களும் ஏலவே நடைபெறவில்லை. ஆகவே மீண்டும் அதே போன்று கருத்துக்களை வெளியிடும் நிலைமையை காணப்படுகின்றது.

அதேநேரம், குறித்த விடயங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்த போதும் அவர்களும் ஒவ்வொரு விடயத்துக்கும் நழுவல் போக்கிலேயே பதிலளித்தார்கள்.

ஆகவே எமது மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் எந்த ஒரு உறுதியான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை வாக்குறுதிகளும் வழங்கப்படாத துரதிர்ஷ்டமான நிலைமையே இந்த சந்திப்பிலும் நீடித்தது.

இதனடிப்படையில் இது காலத்தை நீடித்துச் செல்லும் நோக்குடையதா என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.

சிவி விக்னேஸ்வரன் 

யாழ். பாராளுமன்ற உறுப்பினர் சி.விக்னேஸ்வரன் கூறுகையில்,

தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த போது தொல்பொருள் திணைக்களம் அடையாளமிடப்படும் பகுதிகளில்  பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் நான் சுட்டிக்காட்டினேன்.

அதனடிப்படையில் குறித்த விடயம் சம்பந்தமாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் உடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டின் வரைபடத்திற்கு அமைவாக தொல்பொருள் விடயங்களை மீண்டும் பின்னநகர்த்துவதாக இணக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.