இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யுமாறு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

117 0

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுவிக்க பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானை சுற்றி வளைத்து துணை இராணுவத்தினர் கைது செய்தனர்.

அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தலைமை நீதிபதி பந்தியால் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்.

இதன்படி ஆஜரான இம்ரான் கானை விடுதலை செய்ய பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.