குஜராத்தில் திருமணத்துக்கு முந்தைய நாள் 150 கி.மீ. பயணித்து அரசு பணி தேர்வு எழுதிய மணமகள்

79 0

குஜராத் மாநில ஊராட்சி பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் கிராம செயலாளர் (நிலை 3) பணிக்கான தேர்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு வடோதரா நகரின் கோத்ரி பகுதியைச் சேர்ந்த பால்குனி பார்மர் (24) என்ற இளம்பெண் விண்ணப்பித்திருந்தார்.

இதனிடையே அவருக்கு 8-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு அடுத்த நாள் திருமணம் என்ற நிலையில், அவருக்கு 150 கி.மீ. தொலைவில் உள்ள தஹோட் நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் பால்குனி வீட்டில் நடைபெற்ற திருமணத்துக்கு முந்தைய சடங்குகளை முடித்துக் கொண்டு, அதே நாளில் 150 கி.மீ. தூரம் பயணம் செய்து அந்தத் தேர்வை எழுதினார்.

எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள பால்குனி கூறும்போது, “திருமணம் என்பது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நிகழ்வு. அதேநேரம் கல்வி மற்றும் வேலையும் மிகவும் முக்கியம்தான். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவேதான் திரு
மணத்துக்கு முந்தைய சடங்கை முன்கூட்டியே முடித்துக்கொண்டு உடனே தேர்வு மையத்துக்குச் சென்று தேர்வை எழுதினேன்” என்றார்.