லண்டனில் இலங்கை சாரணர்களை சந்தித்த ஜனாதிபதி

148 0

நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை பொறுப்பேற்க இளைஞர்கள் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஐக்கிய இராச்சிய சாரணர்  இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முடிசூட்டு விழா  முகாமில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற  இலங்கை சாரணர்  இயக்கத்தின் சிரேஷ்ட சாரணர்கள்  மற்றும் பெண் சாரணர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் இடம்பெற்றுள்ளது. இதன் போதே இதனை இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முடிசூட்டு விழாவுக்கு இலங்கை சாரணர்  இயக்கத்தைப்  பிரதிநிதித்துவப்படுத்தி ஷலினி பெரேரா, அரிதா பண்டார,  அசேல பண்டார மற்றும் சரித் பெர்னாண்டோ ஆகிய சாரணர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, உலகளாவிய காலநிலை மாற்றம் உள்ளிட்ட தேசிய மற்றும் சர்வதேச நலன்களில் தீவிரமாக ஈடுபடுமாறு  சாரணர்களை ஊக்குவித்துள்ளார்.

இலங்கை சாரணர்  இயக்கத்தின் பிரதம ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.