மன்னாரில் கத்திமுனையில் வைத்தியரிடமிருந்து பெருந்தொகை பணம், நகை கொள்ளை

156 0

மன்னார் -நானாட்டான் பிரதேசத்தில்  ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரின்  தனியார் கிளினிக்கிற்கு ஞாயிற்றுக்கிழமை (7) இரவு 9 மணியளவில் புகுந்த கொள்ளையர்கள்  கத்தியை காட்டி மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணம் மற்றும் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவமானது நானாட்டான்  பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் தனியார் கிளினிக்கில் இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்று ஞாயிற்றுக்கிழமை (7)  இரவு 9 மணியின் பின் கிளினிக் வளாகத்தினுள் நுழைந்த இரண்டு பேர்  சிங்களத்திலும் தமிழிலும் பேசிக் கொண்டு  குறித்த வைத்தியரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்.

இதன் போது சுமார் 5 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட  பணம் மற்றும் நகை போன்றவற்றை அபகரித்துள்ளனர்.

மேலும் குறித்த வீட்டில் இருந்த பெண்களின் நகைகளையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்கள்.

இதன் போது வைத்தியரின் மூக்குக் கண்ணாடி உடைந்ததில்  வைத்தியருக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச்  சம்பவம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (8) காலை பாதிக்கப்பட்ட வைத்தியர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை நானாட்டான் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பல திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

குறித்த வைத்தியர் நீண்ட காலம் வைத்தியராக சேவையாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.