வெசாக் வாரத்தையொட்டி காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைத்திருந்த மதுபான போத்தல்களை கைப்பற்றியதுடன், பெண் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (4) காலை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சியாம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த சுற்றிவளைப்பை நடாத்தி மதுபான போத்தல்களை போத்தல்களை கைப்பற்றியதுடன் 39 வயதுடைய பெண் ஒருவரையும் 49 வயதுடைய ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
நாவற்குடா நான்காம் குறுக்குத் தெருவில் வீடொன்றின் குப்பைகளுக்குள் வெசாக் விடுமுறை காலத்தில் அதிக பணத்திற்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 19 சிறிய சாராய போத்தல்கள் மற்றும் 18 பியர் டின்களுடன் பெண்ணொருவரையும் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைத்திருந்த 750 மில்லி லீற்றர் கசிப்பு போத்தலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பில் உப பொலிஸ் பரிசோதகர் எம்.இஸ்ஹாக் பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜெயவீர தாஹா சந்திரகாசன் தனோஜன் ஆகியோர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

