‘ஜெனீவாவில் இந்தியா உதவினால் தமிழர்கள் உள்ளத்தில் ரணம்’ – வைகோ

274 0

ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் உதவக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மின்னஞ்சல் கடிதமொன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளார்.

“ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற மனித உரிமை பேரவை கூட்டத்தில் இலங்கைத் தீவில் உள்ள தற்போதைய சூழ்நிலையையும், இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு குறித்தும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான தாக்குதல்களை அந்நாட்டு அரசாங்கங்கள் 1955ஆம் ஆண்டிலிருந்து தொடுத்ததோடு, ஈழத் தமிழ் இனத்தை அழிக்க இனப் படுகொலை செய்து வந்தது.

1999 ஆம் ஆண்டில் அப்பொழுது பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, இலங்கைக்கு இந்திய அரசு எந்தவிதமான இராணுவ உதவியும் செய்வது இல்லை என்றும் ஆயுதங்களை விற்பனைகூட செய்வது இல்லை என்றும் ஏகமனதாக முடிவெடுத்து பிரகடனமும் செய்தார்.

ஆனால், பின்னர் மத்தியில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அந்த முடிவுக்கு நேரெதிராக அனைத்து விதமான இராணுவ உதவியையும் இலங்கை அரசாங்கத்துக்குச் செய்ததோடு, ஆயுதங்களும் வழங்கியது.

இலங்கை அரசாங்கத்துடன் இருநாட்டு கடல்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தமும் செய்தது.

ஐ.நா.வின் அன்றைய பொதுச்செயலாளர் பான் கீ மூன், மாருஸ்கி தாருஸ்மான் தலைமையில் அமைத்த குழு, அதன் அறிக்கையை 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், வயது முதிர்ந்தோர், நோயாளிகள், குழந்தைகள், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் உள்ளிட்ட ஒரு இலட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள், 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை ஆதாரத்தோடு வெளியிட்டது.

ஆனால், இந்தியாவின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், ஐ.நா மனித உரிமை பேரவையில், 2009 மே மாதத்தில் மிகவும் வஞ்சமாக இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டி மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்தது.

இந்நிலையில், இலங்கை இராணுவத்தினர் 2009ஆம் ஆண்டு நடத்திய போர்க்குற்றங்களை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு சர்வதேச நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்றொரு தீர்மானத்தை 2015ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

ஆனால், அத்தகைய விசாரணை நடத்த, அன்றிருந்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்காமல் மறுத்துவிட்டது.

இந்நிலையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமாட்டோம் என்று அந்நாட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகிய இருவரும் அறிவித்துவிட்டனர்.

ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போய்விட்டனர்.

90 ஆயிரம் தமிழ்ப் பெண்கள் விதவைகளாகிவிட்டனர்.

வடக்கு மாகாணத்தில் மட்டும் 60 ஆயிரம் ஏக்கர் பூமியை, இராணுவத்தினர் ஆக்கிரமிப்புச் செய்துகொண்டு, சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்திவிட்டனர்.

கண்துடைப்புக்காக வெறும் 3ஆயிரம் ஏக்கர் நிலம்தான் ஈழத்தமிழர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த சனிக்கிழமை  அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இளவரசர் அல்-ஹுசைன், இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் தாமதம் காணப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

இவ்வாறான நிலையில், இம்​முறை நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், முன்னைய அரசாங்கமான, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மேற்கொண்ட தவறான அணுகுமுறையை இம்முறையும் இந்திய அரசாங்கம் பின்பற்றக்கூடாது.

இவ்வாறான நிலையில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது.

அப்படி உதவினால் உலகெங்கும் உள்ள தமிழர்கள் உள்ளத்தில் தாங்க முடியாத ரணத்தையும் வேதனையையும் ஏற்படுத்தும்.

இந்நிலையில், சர்வதேச நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற விசாரணையை வலியுறுத்தவேண்டும்” என்றும் அக்கடிதத்தில் வைகோ கோரியுள்ளார்.