மே தினக் கூட்டங்களுக்கு வரும் வாகனங்களை நிறுத்த பிரத்தியேக இடங்கள்

112 0

நாட்டின் பல பகுதிகளிலும் நாளை திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வரும் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு பிரத்தியேக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் தவிர்ந்த வேறு இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சாரதிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சுகததாச அரங்கில் இடம்பெறும் கூட்டத்துக்கு மக்களை அழைத்து வரும் பேருந்துகள் அல்லது வாகனங்களை மெட்டி பார்க் பிரதேசத்திலும், புளுமெண்டல் வீதியிலும், சுகததாச அரங்கை அண்மித்த வீதி ஓரங்களிலும் நிறுத்தி வைக்க முடியும். கெம்பல்பிட்டி கூட்டத்துக்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக ஜி.டி.பெரேரா மாவத்தை, சிறிதம்ம மாவத்தை, பேஸ்லைன் வீதி (தெமட்டகொடையிலிருந்து சிறைச்சாலை வரை), கன்னக்கரா வித்தியாலய வீதி என்பவற்றில் நிறுத்தி வைக்க வேண்டும்.

பஞ்சிகாவத்தை சந்தியில் இடம்பெறவுள்ள கூட்டத்துக்கு வரும் வாகனங்களை மடபார்க் தரிப்பிடம், சோன்டஸ் தனியார் பஸ் தரிப்பிடம், அடிசிய வீதி தரிப்பிடம், வேல்ல வீதி என்பவற்றில் நிறுத்தி வைக்க முடியும்.

ஹெவ்லொக் பி.ஆர்.சி. மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்துக்கு வரும் வாகனங்களை ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, சுதந்திர வீதி, ரீட் மாவத்தை, மேட்லன்ட் கிரசன்ட் அரச நிர்வாக சுற்றுவட்டத்திலிருந்து மேட்லன்ட் கிரசன்ட் வரை, தர்மபால மாவத்தை சந்தியிலிருந்து செஞ்சிலுவை சந்தி வரை, எப்.ஆர். சேனாநாயக்க மாவத்தை சந்தியிலிருந்து செஞ்சிலுவை சந்தி வரை, மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையிலிருந்து நூதனசாலை வரை நிறுத்தி வைக்க முடியும்.

செஞ்சிலுவை சந்தியில் இடம்பெறும் கூட்டத்துக்கு வரும் வாகனங்கள் வொக்சோல் வீதியிலும், மாநகர சபையை அண்மித்த பகுதியில் இடம்பெறும் கூட்டத்துக்கு வரும் வாகனங்களை மல் வீதியிலும், கோட்டை புகையிரத நிலையத்துக்கு வரும் வாகனங்களை மில்டன் பெரேரா தரிப்பிடத்திலும் நிறுத்தி வைக்க முடியும்.

இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை தவிர்த்து வேறு எந்தவொரு இடத்திலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றின் உரிமையாளர் அல்லது சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து இடையூறு விளைவிக்கும் வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் அவை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்படுவதோடு, உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றார்.