இந்திய விமானப்படை தளபதி நாளை இலங்கை வருகிறார்

90 0

பிராந்தியங்களுக்கிடையிலான சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள், கூட்டுப்பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இலங்கையின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பதற்காக இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்காக திங்கட்கிழமை (மே 1) நாட்டுக்கு வருகை தரவுள்ளார்.

இது தொடர்பில் இலங்கை விமானப்படை தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது:

விமானப்படை தளபதி எயா மார்ஷல் சுதர்ஷன பத்திரணவின் அழைப்புக்கமைய, இந்திய விமானப்படைத் தளபதி எயா சீப் மார்ஷல் விவேக் ராம் சௌத்ரி உள்ளிட்ட நால்வர் அடங்கிய தூதுக்குழு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை நாட்டுக்கு வரவுள்ளது.

1982இல் போர் விமானத்தின் விமானியாக இந்திய விமானப்படையில் இணைந்த அவர்,  MiG-21, MiG-23MF, MiG-29, Su-30Mki உள்ளிட்ட பல்வேறு போர் விமானங்களில் 3800 மணித்தியாலங்கள் பயணித்த அனுபவம் உடையவர் ஆவார்.

விமானிகளுக்கான பயிற்றுவிப்பாளராகவும், விமானிகளுக்கான உபகரணங்களுக்கான மதிப்பீட்டாளராகவும் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த அவர் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் 30ஆம் திகதி இந்திய விமானப்படையின் 27ஆவது தளபதியாக பதவியேற்றார்.

இந்த விஜயத்தின்போது பிரதானமாக பிராந்திய விமானப்படைகளுக்கிடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்தல், கூட்டு பயிற்சிகள் மற்றும் தொழில்நுட்ப அனுபவப் பகிர்வுகள், சமுத்திர கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் இரு தரப்பு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்தோடு, இந்திய விமானப்படைத் தளபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன உள்ளிட்டோரையும் சந்திக்கவுள்ளார்.

மே மாதம் 6ஆம் திகதி அவர் நாட்டிலிருந்து செல்லவுள்ளதாக விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.