உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் சரத்துக்கள் நாட்டின் அரசியலமைப்பினூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகத் தமது இறுதி அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழு, எனவே இச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சிடம் வலியுறுத்துமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் குறித்து ஆராய்வதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் ஜனாதிபதி சட்டத்தரணி பாலித பெர்னாண்டோ தலைமையில் எண்மரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பை அடுத்து அவசியமான திருத்தங்களை மேற்கொண்டதன் பின்னர் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருக்கும் பின்னணியில், மேற்படி விசேட குழு 10 பக்கங்கள் அடங்கிய அதன் இறுதி அறிக்கையை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌஷல்ய நவரத்னவிடம் கையளித்துள்ளது.
இக்குழுவானது குறிப்பாக 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டம், தண்டனைச்சட்டக்கோவை, 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவை, 2015 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க குற்றங்களால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான சட்டம், இலங்கையின் அரசியலமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் தமது ஆராய்வை மேற்கொண்டிருக்கின்றது.
அதன்படி அரசியலமைப்பின் ஊடாக நாட்டுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படைகளையும் உத்தரவாதங்களையும் பாதுகாத்தல் என்பவற்றை இலக்காகக்கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் உரியவாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று மேற்படி குழு பரிந்துரைத்துள்ளது.
முதலாவதாக எத்தகைய செயற்பாடுகள் பயங்கரவாதக்குற்றத்தில் உள்ளடங்கும் என்ற விடயம் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் 3 ஆம் சரத்தின் ஊடாகத் தெளிவாக வரைவிலக்கணப்படுத்தப்படாமை முக்கிய குறைபாடாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அக்குழு, எனவே இது மக்களின் உரிமைகளுக்கு அப்பால் ‘பயங்கரவாதம்’ என்ற பதம் விரிவாக வரைவிலக்கணப்படுத்தப்படக்கூடிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருப்பதாகவும் கவலை வெளியிட்டுள்ளது.
ஆகவே தவறான முறையில் பிரயோகிக்கமுடியாதவாறும், நபர்களை நியாயமற்றவகையில் கைதுசெய்யமுடியாதவாறும் ‘பயங்கரவாதம்’ என்ற பதத்தை மிகச்சரியாக வரையறுப்பது இன்றியமையாததாகும் என்று அக்குழு பரிந்துரைத்துள்ளது.
அடுத்ததாக பயங்கரவாதக்குற்றத்துக்குத் தண்டனையாக மேல்நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கமுடியுமென 4 ஆம் சரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள சட்டத்தரணிகள் சங்கத்தின் குழு, இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டாலும்கூட அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே 4 ஆம் சரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதால், அதனைத் திருத்தியமைக்கவேண்டும் என்று மேற்படி குழு வலியுறுத்தியுள்ளது.
மேலும் 10, 11, 13, 14, 15, 16, 30, 31, 36, 82, 83, 84, 85, 86 ஆகிய சரத்துக்களும் 28(2)(ஏ), 28(2)(பி) ஆகிய பிரிவுகளும் திருத்தியமைக்கப்படவேண்டும் என அக்குழு பரிந்துரைத்துள்ளது.
இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்பின் 3 ஆம் பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் அமைந்திருப்பதாகவும், எனவே ஏற்கனவே கூறப்பட்டவாறு அவசியமான திருத்தங்களை மேற்கொள்ளும்படி நீதியமைச்சுக்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிகள் சங்கத்துக்குப் பரிந்துரைப்பதாகவும் அவ்விசேட குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

