ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

453 0

201607200305051491_Travel-and-Hindu-Religious-Endowment-crore-on-behalf_SECVPF (1)தமிழகம் முழுவதும் ரூ.12.5 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் 13 ஆயிரத்து 175 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் இரண்டு தளங்களில், 21 அறைகளுடன் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியை காணொலிக் காட்சி மூலமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

மேலும், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேசுவரர் திருக்கோவில் அருகில் 3,560 சதுர அடி கட்டிட பரப்பளவில், தரை மற்றும் முதல் தளத்தில், 10 அறைகளுடன் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி;
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிலைகள் பாதுகாப்பு மையம்;

மதுரை மாவட்டம் – சதுரகிரி சுயதர மகாலிங்கசுவாமி திருக்கோவில், திருவாரூர் மாவட்டம் – ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம் – திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலின் உபகோயிலான திருவாலங்காடு வாடாரண்யேஸ்வரர் திருக்கோவில்,

கடலூர் மாவட்டம் – சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோவில், புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் மற்றும் சென்னை – திருவட்டீஸ்வரன்பேட்டை திருவட்டீஸ்வரர் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில் ஒரு கோடியே 95 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 6 அன்னதான கூடங்கள்;

கோயம்புத்தூர் மாவட்டம் – பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம் – புட்லூர் பூங்காவனத்தம்மன் என்கிற அங்காள பரமேஸ்வரி திருக்கோவில், மதுரை மாவட்டம் – சதுரகிரி சுயதரமகாலிங்கசுவாமி திருக்கோவில் மற்றும் திருச்சி மாவட்டம் – திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் திருக்கோவில் ஆகிய இடங்களில் 2 கோடியே 51 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வரவேற்பு மையம், பக்தர்கள் தங்கும் விடுதிகள் மற்றும் சேவார்த்திகள் ஓய்வு கூடங்கள்;

அரியலூர் மாவட்டம் – கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப்பெருமாள் திருக்கோவில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, திருச்சி மாவட்டம் – திருவானைக்காவல் ஜெம்புகேஸ்வரர் திருக்கோவில், மதுரை மாவட்டம் – சதுரகிரி சுயதர மகாலிங்கசுவாமி திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டம் – விராலிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மற்றும் சேலம் மாவட்டம் – ஜாகீர் அம்மாப்பாளையம் வெண்ணங்குடி முனியப்பசுவாமி திருக்கோவில் ஆகிய இடங்களில் 96 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் குளியலறைகள்;

திருநெல்வேலி மாவட்டம் – குற்றாலம், பராசக்தி மகளிர் கலைக் கல்லூரியில் 98 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கம்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் – ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில், சேலம் மாவட்டம் – சேலம் நகர் சுகவனேஸ்வரர் திருக்கோவில் மற்றும் மேச்சேரி பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆகிய இடங்களில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொருட்கள் வைப்பறை, மிதியடி பாதுகாப்பு அறை, வணிக வளாகம் மற்றும் தேர் பாதுகாப்பு கொட்டகை;

அரியலூர் மாவட்டம் – கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் திருக்கோவில் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 58 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், ஆய்வுக்கூடம் மற்றும் அலுவலக கட்டிடம்; என மொத்தம் 12 கோடியே 64 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.