13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தும் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது இந்தியா

143 0

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் , மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோருக்குமிடையில் வெள்ளிக்கிழமை (28) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், உறுப்பினர் ஜி. கருணாகரன், புளொட் தலைவர் டி.சித்தார்த்தன் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், டெலோவின் செய்தித் தொடர்பாளர் ஜி. சுரேந்திரன் மற்றும்  ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதோடு , இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அது தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் குறித்து உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் விளக்கமளித்தனர்.

மேலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார் என குறிப்பிடப்பட்டுள்ளது.