புகையிரத சேவை திணைக்களமாக காணப்படும் பின்னணியில் நடைமுறைக்கு சாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
ஆகவே புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான சட்ட திருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அமைச்சர் மேலும் உரையாற்றியதாவது,
மூன்று பொதி விநியோக புகையிரத சேவை,எட்டு எரிபொருள் விநியோக சேவை,40 பயணிகள் புகையிரத சேவை ஆகியவற்றின் ஊடாக பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன.
கொழும்பு கோட்டை- அநுராதபுரம், கொலன்னாவ- அநுராதபுரம், கொலன்னாவ – மட்டக்களப்பு,கொலன்னாவ – கட்டுநாயக்க விமான நிலையம், கொலன்னாவ – காலி ஆகிய பகுதிகளுக்கு புகையிரதங்கள் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றன.
புகையிரதங்கள் ஊடாக மொத்த சந்தைக்கு அல்லது பிரதான நிலை சந்தைகளுக்கு மரகறிகளை விநியோகம் செய்ய 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியான ஒத்துழைப்புகள் கிடைப்பனவு, நிதி நெருக்கடி ஆகிய காரணிகளால் இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை.
புகையிரத என்ஜின்கள்,புகையிரத பெட்டிகள் பல ஆண்டுகாலமாக இறக்குமதி செய்யப்படவில்லை.50 ஆண்டுகளாக பாவனை செய்த புகையிரத என்ஜின்கள் தற்போதும் பயன்படுத்தப்படுகின்றன.
நடைமுறைக்கு சாத்தியமான வகையில் புகையிரத பெட்டிகள்,புகையிரத என்ஜின் மற்றும் புகையிரத பாதைகள் திருத்தம் செய்யப்படாததால் புகையிரத சேவை கட்டமைப்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன.
புகையிரத சேவையில் நிலவும் பதவி வெற்றிடங்கள்,சேவை கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த திட்டமும் புதிதாக வகுக்கப்படவில்லை.
நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய நியமனங்களை வழங்க முடியாது.புகையிரத சேவையில் இருந்து ஓய்வு பெற்ற புகையிரத சாரதிகள், புகையிரத சேவை ஒழுங்குப்படுத்தாளர்கள் உட்பட புகையிரத சேவை கட்டமைப்பின் சேவையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
புகையிரத சேவையில் வருமானத்தை காட்டிலும்,செலவு பன்மடங்காக காணப்படுகிறது.2021 ஆம் ஆண்டு புகையிரத சேவையின் வருமானம் 2.9 பில்லியன் ரூபாவாக காணப்பட்ட நிலையில் புகையிரத சேவையாளர்களுக்கு2.3 பில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒட்டுமொத்த சேவையாளர்களுக்கும் சம்பளம் வழங்க 7 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
புகையிரத சேவை திணைக்களமாக காணப்படும் பின்னணியில் நடைமுறைக்கு சாத்தியமான மாற்றங்களை ஏற்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது.
ஆகவே புகையிரத திணைக்களத்தை,அதிகார சபையாக மாற்றியமைக்க வேண்டும்.அதற்கான சட்டதிருத்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என்றார்.

