அவுஸ்திரேலிய நிறுவனமும் இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க திட்டம் !

178 0

இலங்கையில் எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் அவுஸ்திரேலிய நிறுவனப் பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மெய்ந்நிகர் ஊடாக வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றுள்ள இந்த சந்திப்பில் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலிய நிறுவனப் பிரதிநிதிகளுடன் இலங்கையில் எரிபொருள் விநியோக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக அடுத்த நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய எரிபொருள் விநியோகம் மற்றும் விற்பனை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ள காலம் தொடர்பில் அடுத்த வாரம் அறிவிப்பதாக குறித்த அவுஸ்திரேலிய நிறுவனப்பிரதிநிதிகள் தெரிவித்ததாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, மத்திய வங்கி , முதலிட்டு சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உள்ளிட்டவற்றின் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் எரிபொருள் விநியோகத்தினை முன்னெடுப்பதற்கு சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம் , அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதியை வழங்குவதற்கு கடந்த மார்ச் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.

அதற்கமைய சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் எரிபொருள் விநியோகம் குறித்த ஒப்பந்தம் எதிர்வரும் மே மாதத்தில் கையெழுத்திடப்படவுள்ளதோடு , 45 நாட்களுக்குள் அதன் செயற்பாடுகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.