பெல்ஜியத்தில் உள்ள பயண முகவர்களுடன் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம் கலந்துரையாடல்

56 0

பெல்ஜியத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் பெல்ஜிய பயணச் சந்தையில் சுற்றுலா மேம்பாட்டிற்காக “மீண்டும் இலங்கைக்கு வரவேற்கிறோம்” (வெல்கம் பேக் டு ஸ்ரீலங்கா) என்ற தலைப்பில் ஒரு பட்டறையை ஏப்ரல் 20, 2023 அன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள பிரஸ் கிளப்பில் நடத்தியது.

இதில் 80க்கும் மேற்பட்ட சுற்றுலா ஆபரேட்டர்கள், டிராவல் ஏஜென்ட்கள் , பயண பதிவர்கள், சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள், பயண பத்திரிகையாளர்கள், ஊடக வல்லுநர்கள் மற்றும் தொலைக்காட்சி வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வாதம், பயண நிபுணர்களிடம் உரையாற்றுகையில்,

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு இலங்கை மீண்டும் ஒரு அற்புதமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிய தூதுவர், 2023 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறைக்கு ஏற்ற ஆண்டாக அமைகிறது என்றும், சிறந்த விடுமுறையை அனுபவிப்பதற்காக அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாகவும் கூறினார்.

தூதுவர் ஆசிர்வதம், பெல்ஜியத்தில் உள்ள பயண வல்லுநர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலங்கையைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

சுற்றுலாத் தலங்களின் முன்னுரிமைப் பட்டியலில் இலங்கை ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களை தூதுவர் ஆசிர்வதம் விரிவாக விளக்கினார்.

பல்வேறு சுற்றுலா இடங்களைக் கொண்ட இலங்கை ஒரு அருமையான விடுமுறைக்கு சிறந்த இடமாகும் என்றும் அவர் கூறினார்.

அன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் மொனிக் டி டெக்கர் மற்றும் இலங்கையிலுள்ள அன்ட்ரூஸ் டிராவல்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மகேன் காரியவாசன் ஆகியோர் இந்த செயலமர்வில் உரையாற்றினர்.

மொனிக் டி டெக்கர் இலங்கையின் இயற்கை அழகு, வரலாற்று மற்றும் புராதன தளங்கள், யுனெஸ்கோவால் பட்டியலிடப்பட்ட பாரம்பரிய தளங்கள்,  கடற்கரைகள், சாகச மற்றும் விளையாட்டு, வனவிலங்குகள், ஆரோக்கியம் மற்றும் ஆயுர்வேதம், இலங்கை உணவு வகைகள், திருவிழாக்கள் மற்றும் இலங்கையில் ஷாப்பிங் வசதிகள்  பற்றி பேசினார் .

மகேன் காரியவாசன் தங்குமிட வசதிகள், போக்குவரத்து இணைப்பு, மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட இலங்கையின் தரமான சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் பற்றி பேசினார்.

பெல்ஜியப் பயணத் தொழில் நிபுணரான ஜொஹான் சிக்ஸ், இலங்கையில் தனது சுற்றுலா வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இலங்கை என்பது அனைவராலும் ஆராயப்பட வேண்டிய இயற்கையான சுற்றுலாத் தலமாகும் என்பதை வலியுறுத்தினார்.

பெல்ஜியத்தில் இருந்து இலங்கைக்கு விமானங்களை இயக்கும் எமிரேட்ஸ், கட்டார் ஏர்வேஸ், எதிஹாட் மற்றும் துருக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.