தேசிய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வியெழுப்பி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் .மேலும் கூறுகையில்,
சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் உள்ளடங்கும் தகவல்களை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறு கோரிக்கை முன்வைத்த போதும், மார்ச் மாதத்தில் உடன்படிக்கை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இறுதி அனுமதி வழங்கும் வரையில் அது தொடர்பான தகவல்கள் முன்வைக்கப்படவில்லை.
தற்போதைய ஜனாதிபதி எதிர்க்கட்சியில் இருக்கும் போது அதனை சபையில் முன்வைக்க வேண்டும் என்று கூறியவர் இப்போது ஜனாதிபதியாகிய பின்னர் தாளத்தை மாற்றி, அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்தாது இரகசியமாக வைத்திருக்கின்றார். அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்.
அதனால் அது தொடர்பாக பின்வரும் கேள்விகளுக்கு அரசாங்கத்திடம் வெளிவான பதிலை எதிர்பார்க்கிறேன். இதன்படி இலங்கையில் கடன் மறுசீரமைப்பின் போது உள்நாட்டு கடன் உள்ளடங்காது என்று நிதி இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் அடிக்கடி கூறினாலும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பரந்துபட்ட வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் இப்போது கூறியுள்ளார்.
இவ்வாறு பரஸ்பர வேறுபாடான கருத்துக்கள் மூலம் மக்களை ஏமாற்ற அரசாங்கம் முயற்சிக்கின்றதா? மக்களின் நம்பிக்கையை இல்லாது செய்ய முயற்சிக்கின்றதா? ஏன் மக்களையும் பாராளுமன்றத்தையும் நாட்டையும் திசை திருப்ப வேண்டும் என்றும் கேட்கின்றேன்.
அத்துடன் இவ்வாறான நடவடிக்கைகளின் போது ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாது என்பதனை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியுமா? இது தொடர்பான முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் தற்போது இணங்கியுள்ள விடயங்களை செயற்படுத்தும் போது பலமான சமூக பாதுகாப்பு கட்டமைப்பு அவசியமாகும்.
இதனை செயற்படுத்தும் போது மொட்டுக் கட்சியின் எம்.பிக்களும் வேறு கட்சிகளின் எம்.பிக்களுமே பிரதேசங்களில் நிவாரணங்களை வழங்குவதாக அறிகின்றோம். இதில் அரசியல் இருந்தால் நாங்கள் முறையிட நேரிடும். ராஜபக்ஷ காலத்தில் ஆடியதை போன்று தற்போது ஆட வர வேண்டாம். அதற்கு இடமளிக்கப் போவதில்லை.
மேலும் இது தொடர்பான நடவடிக்கைகளின் போது முறையான சனத்தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். 2012 ஆம் ஆண்டில் செய்த சனத்தொகை கணக்கெடுப்பு இப்போது மாறியுள்ளது. இதனால் கணக்கெடுப்பை எப்போது நடத்தப் போகின்றீர்கள் என்று கேட்கின்றேன்.
அத்துடன் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த போகின்றீர்களா? இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார்.

