ஐ.நா சிவப்பு எச்சரிக்கைக்கு மாற்றீடு யோசனை வேண்டும்

260 0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், கொடுக்கப்படுகின்ற அழுத்தங்களுக்கு முகம்கொடுப்பதற்காக மாற்று யோசனைகள் குறித்து அவதானத்தை,  இலங்கை செலுத்த  வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்தார்.

நீதி மற்றும் நல்லிணக்கத்துக்காக, இலங்கை முன்னெடுக்கும் செயற்பாட்டு முறைமைகள், மிகமிக மெதுவாக பயணிப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில், கடந்த வெள்ளிக்கிழமை முன்வைக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் காரணமாக, இலங்கையில் நிலையான சமாதானத்தை அண்மிப்பதற்கு காலதாமதம் எடுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கைக்கு எதிராக, மனித உரிமைகள் பேரவையில், இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்காமையின் காரணமாகவேஈ இவ்வாறான அழுத்தங்களுக்கு இம்முறையும் முகங்கொடுக்கவேண்டிய நிலைமை, இலங்கைக்கு ஏற்பட்டது.   அந்த சவால்களை வெற்றிக்கொள்ளவதற்கு, சர்வதேசத்திடம் இன்னுமின்னும் கால அவகாசம் கேட்பதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை” என்றும், அவர் குறிப்பிட்டார்.

நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளமை காரணத்தால், சர்வதேசத்துடன் எதிர்காலத்தில் முரண்பாடான நிலைமையொன்றுக்கே, இலங்கை முகம்கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.    உயர்ஸ்தானிகர் அறிக்கை    இதேவேளை, ஐ.நா மனித உரிமை பேரவையில் கடந்த சனிக்கிழமை (04) அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் இளவரசர் அல்-ஹூசைன், இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் தாமதமாகக் காணப்படுவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இலங்கை, நிலைமாற்று நீதி உறுதிப்பாடுகளை நிறைவேற்றுவது தாமதமாக காணப்படுகின்றது என்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இதேவேளை, இலங்கையில் நிரந்தரமாக ஐ.நா அலுவலகம் தேவை. கலப்பு நீதிமன்றத்துக்கான சட்டமூலம் வேண்டும். விசேட அறிக்கையாளரை அழைக்கவேண்டும் என்று, அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இலங்கையில் சித்திரவதைகள் தொடர்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

த.தே.கூ அறிக்கை    இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   “தமிழ் தேசிய கூட்டமைப்பானது, 2015ஆம் ஆண்டின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தும் வகையிலான, மனித உரிமை பேரவை உயர் ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கிறது.    இவ்வறிக்கையானது, அரசியல் சாசன உருவாக்கம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் போன்ற கருமங்கள் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டுள்ள அதேவேளை, அரசாங்கம் செய்யத் தவறிய பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் விமர்சனத்தையும் கொண்டுள்ளது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து கூட்டமைப்பு, விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, அறிக்கை தொடர்பில் அக்கறை செலுத்துவதோடு, நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயங்களான காணி விடுவிப்பு, கைதிகளின் விடுதலை, பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளை பாதுகாக்கும் அதிகாரசபையை மறுசீரமைத்தல், வர்த்தக மற்றும் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினரின் ஈடுபாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் போன்றன தொடர்பிலான, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்திருக்கவில்லை என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறது.    உண்மையில், இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடற்ற நிலைமையானது, எம்மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நேர்த்தியாகக் குறைந்து வருகின்றது.

பொறுப்புக்கூறல் தொடர்பில் நாம் தொடர்ந்து எமது கரிசனையை வெளிக்காட்டி வந்துள்ளதோடு, தனது பொருத்தனைகளை நிறைவேற்றும்படியான கால வரையுடன் கூடிய ஒரு செயற்றிட்டத்தை சமர்ப்பிக்கவும் வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டிருந்தோம்.    வழமையான நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்ட சில அடையாளபூர்வமான வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு, அமைப்பு ரீதியில் காணப்பட்ட தவறுகளானது, அரசாங்கம் ஏற்றுக்கொண்டதன்படி சர்வதேச பங்களிப்புடனான விசேட நீதிமன்றத்தின் தேவையை வலியுறுத்தி காட்டுகின்றது.    உயர் ஸ்தானிகரின் பரிந்துரைகளில், இந்த காரியமானது எதிரொலிப்பதை நாம் வரவேற்கிறோம். மேலும், காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்த விரும்புகிறோம். இந்த விடயம் தொடர்பில் காரணமற்றதும் நேர்மையற்றதுமான தாமதமானது, காணாமற்போனோரின் குடும்பங்கள் அனுபவிக்கும் அவஸ்த்தையை மேலும் அதிகரிக்க செய்கிறது.

ஆகவே, இலங்கை அரசாங்கத்தோடு மனித உரிமைகள் பேரவையானது நெருங்கிய ஈடுபாட்டை கொண்டிருந்து இந்நாட்டின் முன்னேற்றங்களை கண்காணிக்கும்படிக்கான உயர் ஸ்தானிகரின் அழைப்பை நாம் வரவேற்கிறோம்.    உயர் ஸ்தானிகரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்புமுனையாக மாற்றங்கள் ஏற்படும் விதத்தில் செயற்பட்டு சிறந்த நம்பிக்கையை வெளிக்காட்டுமாறு அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம்” என, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    ஜனாதிபதி நிராகரிப்பு    “வெளிநாட்டுத் தொடர்புகளின் அடிப்படையில் செயற்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுவதுபோல, அரசாங்கத்தை நடத்துவதற்கோ அல்லது முப்படையினர் மீது குற்றப் பத்திரிகைகளை கொண்டு வந்து விசாரணை செய்வதற்கோ தான் தயாராக இல்லை” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பலாலி விமானப் படை முகாமில் சனிக்கிழமை (04) முற்பகல் அவதானிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதன் பின்னர், முப்படையினரையும் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் சந்தித்து உரையாற்றும்போதே, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இவ்வாறு வலியுறுத்தினார்.    வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்து, எமது இராணுவ வீரர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, கடந்த காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் முன்வைத்த ஆலோசனையை தான் முற்றாக நிராகரித்ததாக தெரிவித்த ஜனாதிபதி, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினரின் பாதுகாப்பு மற்றும் கௌவரத்துக்காக தனது பதவிக்காலத்தில் பொறுப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.