ரத்கமவிலிருந்து சித்துல்பவ்வ ஆலய வழிபாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சிறிய பஸ் ஒன்றின் மீது காட்டு யானை தாக்குதல் நடத்தியதுடன், பக்தர்களின் உணவுப் பொருட்களையும் யானை அபகரித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
யானையின் தாக்குதலால் பஸ்ஸிலிருந்த 30 பக்தர்களில் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக சித்துல்பவ்வ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சித்துல்பவ்வ ரஜமஹா விஹாரையின் நிர்வாகத்தினர் தெரிவிக்கையில், இந்தச் சம்பவம் உண்மை எனவும், கபில என்ற யானை கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி பக்தர்களுக்கு இடையூறு விளைவித்துள்ளது எனவும் கூறியுள்ளனர்.
அத்துடன், இந்த யானையை இந்தப் பிரதேசத்திலிருந்து அகற்றுமாறு பல வருடங்களாக எழுத்து மூலமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பயனும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

