மலையக மக்களின் நிவாரணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமலாக்கப்பட்டு வருகின்றன

148 0

அரசாங்கத்தின் அரிசி நிவாரணம் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறுவதில்லை இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து, ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிலித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டில் அரிசி நிவாரணம் அல்லது வேறு எந்த நிவாரணங்களை வழங்கும்போது சமூத்தி பட்டியலை பார்த்தே வழங்கப்படுகிறது. ஆனால் பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள் திட்டமிட்டவகையில் சமுர்த்தி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறனர்.

அதனால் அரசாங்கத்தின் நிவாரணங்கள் சமுர்த்தி பட்டியல் அடிப்படையில் வழங்குமாக இருந்தால் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைக்காது இது பாரிய அநியாயமாகும். அதனால் அரிசி நிவாரணம் பெருந்தோட்டம் உட்பட மலையக மக்கள் அனைவருக்கும் கிடைக்கவேண்டும். அதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன் பெருந்தோட்ட மக்களின் ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதாக உறுதியளித்த ஜனாதிபதி காணாமல் போயிருக்கிறார். பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கவேண்டும் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பெருந்தோட்ட கம்பனிகள் உயர் நீதிமன்றில் வழக்கு தொடுத்திருக்கிறன்றன. 2020இல் தான் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கவேண்டும் என நாங்கள் தெரிவித்து வந்தோம். ஆனால் 2023இலும் அதனை வழங்காமல் இருக்க பெருந்தோட்ட கம்பனிகள் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றன.

அதனால் மலையக மக்களின் அனைத்து வரப்பிரசாதங்களும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதேபாேன்று  காணி பிரச்சினை, தொழிலாளர்களின் ஈபி.எப்., ஈடிஎப் பிரச்சினை என பல பிரச்சினைகளுக்கு மலையக மக்கள் முகம்கொடுத்து வருகின்றனர்.

அதனால் பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் சம்பந்தமாகவும் அவர்களின் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொடுப்பதற்காகவும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மலையக மக்களின் நிவாரணங்கள் திட்டமிட்ட வகையில் இல்லாமலாக்கப்பட்டு வருவதை வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.