பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தபட்சம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின், சுவாத் மாவட்டத்தின் காபால் நகரில் நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் 3 பொதுமக்கள் உட்பட குறைந்தபட்சம் 57 பேர் காயமடைந்துள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுதக்களஞ்சியத்தில் ஏற்பட்ட மின்கசிவு இச்சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு தற்கொலை குண்டுத் தாக்குதலோ பயங்கரவாத தாக்குதலோ அல்ல. கவனயீனத்தால் ஏற்பட்ட சம்பபவம் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மாலாகந்த பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நசீர் மெஹ்மூத் கூறினார். எனினும் விசாரணைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

