ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்சபை கூட்டம் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஆகியவை சட்டத்துக்கு அமைவானது.
தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் அதனை தற்துணிவுடன் எதிர்கொள்வோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கடந்த ஒன்பது மாத காலமாக பொதுஜன பெரமுனவின் தவிசாளராக செயற்படவில்லை.
தவிசாளர் பதவியில் இருந்துக் கொண்டு கட்சியின் கொள்கைகளை விமர்சித்து, வேறுபட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
கட்சியின் தவிசாளர் கட்சி கொள்கைக்கு எதிராக செயற்படும் போது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என பல தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.
கட்சி மட்டத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவர் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டிருக்கும்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பொதுச்சபை கூட்டம் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் சட்டவிரோதமானது என பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் குறிப்பிடுகிறார்.
பொதுச்சபை கூட்டம் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும், தீர்மானங்கள் எடுக்கப்படும்.அப்போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
தனக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள போது அது அரசியலமைப்புக்கு முரண் என்று எதிர்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதாக குறிப்பிடுகிறார்.பொதுச்சபை கூட்டம் மற்றும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஆகியவை சட்டத்துக்கு அமைவானது. ஆகவே தீர்மானங்களை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினால் அதனை தற்துணிவுடன் எதிர்கொள்வோம் என்றார்.

