இந்திய பொருளாதாரத்துடன் இலங்கை இணைய வேண்டும்

54 0

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் டில்லியுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்துடன் இலங்கையை இணைத்து இந்துமா சமுத்திரத்தில் கப்பல் , விமான பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக உருவெடுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மலேசியா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல் போக்குவரத்தில் திருகோணமலையை முக்கிய துறைமுகமாக மாற்றுவதே தனது நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுகத்தின் எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கான அபிவிருத்தி திட்டமிடல்கள் தொடர்பான நிகழ்வு வெள்ளிக்கிழமை (21) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ,

கப்பல் மற்றும் விமானசேவைகள் அமைச்சுக்கும் துறைமுக அதிகார சபைக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். இந்த அமைச்சு தொடர்பில் குறிப்பிடும் போது விமானத்தையும் கப்பல் துறையையும் ஏன் ஒன்றாக இணைத்துள்ளீர்கள்? அதனை வெ வ்வேறு அமைச்சாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்தால் என்ன என பலரும் கோரினர். நான் அதனை முழுமையாக மறுத்து விட்டேன். விமானம் மற்றும் கப்பல் சேவைகளின் மையமாக இலங்கையை உருவாக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும். இலங்கையின் எதிர்காலம் குறித்து சிந்திக்க வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான எமது திட்டம் என்ன என்பது தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டும். அபிவிருத்திகளை இந்த இலக்கை நோக்கி நகர்த்த வேண்டும். இந்தியா , பங்களாதேஷ், ஈரான் போன்ற நாடுகளின் அபிவிருத்திகளை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இந்த நாடுகளின் முன்னேற்ற வலயத்திற்கும் இலங்கையை எவ்வாறு ஒரு கேந்திரமாக்க முடியும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும். அதுவே முக்கியமானது. கொழும்பு துறைமுகம் பொருளாதாரத்தையும் சுற்றுலாத்துறையையும் மையப்படுத்தியதாக உள்ளது.

அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்படுகிறது. விசேடமாக திருகோணமலை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடி வருகின்றோம். மலேசியா, இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல் போக்குவரத்தில் திருகோணமலையை முக்கிய துறைமுகமாக மாற்றுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகவுள்ளது. அம்பாந்தோட்டை  துறைமுகம் அடுத்த 25 ஆண்டு கால திட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். 4000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம், மீன்படி, உற்பத்தி தொழிற்சாலை திட்டங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போன்று விமான நிலையங்களின் அனுமதிகளை முன்னெடுப்பதிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலாலி விமான நிலையத்தையும் ஹிங்குராங்கொட விமான நிலையத்தையும் உள்ளக போக்குவரத்து விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய செயற்பாடுகளை விஸ்தரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தியா குறித்து பலரின் பார்வையும் தற்போது திரும்பியுள்ளது. 2050ஆம் ஆண்டாகும் போது உலகத்தின் பிரபல்யமானதும் முக்கியமானதுமான ஒரு நாடாக இந்தியா திகழும். அந்த நாட்டு சனத்தொகை 1.4 பிலலியன் 1.7 பில்லியனாக உயர்வடையும். தொழில் துறை உற்பத்திகள் மிக வேகமானக இந்தியாவில் வளர்ந்து வருகின்றன. குஜராத் , மகாராஷ்ரா, தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மிக வேகமாக அபிவிருத்தியடைந்து வருகின்றன.

இவ்வாறு இந்தியா பாரியதொரு அபிவிருத்தியை நோக்கி முன்னேறுகையில் இலங்கையை எவ்வாறு தொடர்புபடுத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மீன்பிடி துறையை மேம்படுத்துதல் இலங்கைக்கு மிக முக்கியமான ஒரு திட்டமாக காணப்படுவதுடன் கொள்கலன் கட்டமைப்பை விரிவாக்குவது குறித்து .இந்தியாவுடன் கலந்துரையாடி வருகின்றோம். இந்தியா துறைமுகங்களை அபிவிருத்தி செய்து வருகின்றது. இலங்கையில் ஏற்கனவே சிறந்த துறைமுகங்கள் இயற்கையாகவே அமைந்துள்ளன. அதனை நாம் சாதகமாகவே கொள்ள வேண்டும்.

இந்துமா சமுத்திரத்தில் இலங்கையை கேந்திரமாக மாற்றுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் காணப்படுகனி;ற நிலையில் அதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.