உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுவோம்

70 0

தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரத்தை பொலிஸ்மா அதிபர், பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு வழங்க வேண்டாம் என்றால் அந்த அதிகாரத்தை பாதுகாப்பு அமைச்சருக்கு வழங்க தயார்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் திருத்தங்களை முழுமையாக செயற்படுத்துவோம். நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

உத்தேச பயங்கர எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் தனியார் ஊடகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டு மக்கள் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குகிறார்கள். அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் தேவைகளுக்காக தேசிய பாதுகாப்பை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைந்தது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி மக்கள் அரசியல் ரீதியில் எடுத்த தீர்மானம் தவறானது என்பது குறுகிய காலத்துக்குள் உறுதிப்படுத்தப்பட்டது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதி வசமிருத்தல், பொலிஸார் முன்னிலையில் வழங்கப்படும் சாட்சியம் உள்ளிட்ட இரு காரணிகள் குறித்து தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டன.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூல வரைபில் இவ்விரு விடயங்களும் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தடுப்புக் காவல் பிறப்பிக்கும் உத்தரவு இச்சட்டமூலத்தில் பொலிஸ்மா அதிபர் உட்பட மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸார் முன்னிலையில் வழங்கும் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ்மா அதிபர் தங்களின் விருப்பத்துக்கு அமைய தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்யவும், தடுப்புக் காவல் உத்தரவில் வைக்கவும் நீதவான் நீதிபதியின் அனுமதி பெற வேண்டும்.

தடுப்புக் காவல் உத்தரவு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். தடுப்புக் காவலில் வைக்கப்படும் நபர் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதம்’ என்ற சொற்பதத்துக்கு நீண்ட வரைவிலக்கணம் குறிப்பிடப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

மனித படுகொலை, அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், படுகாயம் ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் ஆகியவற்றை பயங்கரவாதம் என்று குறிப்பிடாமல் ஜனநாயகம் என்றா குறிப்பிட வேண்டும்?

ஜனநாயகம், அடிப்படை உரிமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் பெரிய பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஜேர்மனி உள்ளிட்ட நாடுகளில் இவ்வாறான தன்மைகளே பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகிறது.

சமூக கட்டமைப்பில் காணப்படும் பாதாள குழுக்கள், கூலிப்படையினர் ஆகிய தரப்புக்கள் மேற்குலக நாடுகளில் பயங்கரவாத செயற்பாடுகளாக கருதப்படுகின்றன.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் 2020ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் முன்னெடுக்கப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தினால் ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டன. சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினரின் பெரும்பாலான உறுப்பினர்கள் அங்கம் வகித்த அமைச்சரவை தான் அப்போது இந்த சட்டமூல வரைபுக்கு அனுமதி வழங்கியது.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம் 2018ஆம் ஆண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டமூலம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதி சட்டத்தரணி அர்ஸகுலரத்ன தலைமையில் மேலும் பல ஜனாதிபதி சட்டத்தரணிகளை உள்ளடக்கிய குழுவை நியமித்தது.

அந்த குழுவினர் 33 பக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். அவர்கள் சட்டமூல வரைபின் பல ஏற்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

மக்களின் உயிர் வாழும் உரிமையை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அவசியமற்றது. அரசாங்கம் என்ற ரீதியில் மக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் ஒரு தரப்பினர் நிச்சயம் சட்டமூலத்தை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவார்கள்.

சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் அறிவுறுத்தலை முழுமையாக செயற்படுத்துவோம். நீதிமன்றத்துக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாது என்றார்.