புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் நீதி அமைச்சருக்கு உபதேசித்தது என்ன ?

169 0

னைவரதும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கருத்திற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனுமதிப்பது பொருத்தம் என மஹாநாயக்க தேரர்கள் உபதேசித்தார்கள்.

அதன் பிரகாரம், மஹாநாயக்க தேரர்கள் உட்பட அனைவரதும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கருத்திற்கொண்டு புதிய பயங்கரவாத சட்டமூலத்துக்கு திருத்தங்களை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஏனைய சட்டமூலங்கள் தொடர்பாக  மல்வத்து விகாரை மகாநாயக்கர் திப்பட்டுவே சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்துவதற்காக வெள்ளிக்கிழமை (21) கண்டிக்கு சென்றிருந்த நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் எமது நாட்டிலும் பார்க்க மிகவும் வலுவான பயங்கரவாத தடுப்புச் சட்டம் இருந்து வருகிறது. என்றாலும், சில வெளிநாடுகள் மனித உரிமையை பாதுகாக்கும் முறையை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பாக எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றன.

உலகிலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைமைகளின் அடிப்படையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஊடாக தொழிற்சங்கங்களின் உரிமைகள், ஊடக உரிமைகள், போராட்டங்கள் போன்றவை அடக்கப்படுவதாக தெரிவித்து, சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். என்றாலும், புதிய சட்டமூலம் தொடர்பாக விமர்சிப்பவர்கள், அதில் உள்ளடக்கப்படவேண்டிய திருத்தங்கள் தொடர்பில் எதனையும் முன்வைப்பதில்லை.

அத்துடன், உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை முன்வைப்பதன் பிரதான நோக்கமாக இருப்பது, மக்களின் வாழ்க்கை, சொத்துக்களின் உரிமை மற்றும் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மையை பாதுகாப்பதற்காகும்.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வெளிநாடுகளில் திட்டமிடப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளல் மற்றும் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோக குற்றச்செயல்களுக்காகவும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படுகிறது.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு தொடர்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் நீதவானுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் தொடர்பில் இணங்க முடியாது என்றால் அந்த அதிகாரங்களை பாதுகாப்பு அமைச்சருக்கு உரித்தாக்க முடியும்.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலகின் பலம் வாய்ந்த நாடுகளில் இருந்துவரும் பயங்கரவாதத்தை தடுக்கும் வலுவான சட்ட திட்டங்கள் தொடர்பாக விமர்சிக்காத கிஷ்மா அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகள், நம்மை போன்ற சிறிய நாடுகள் கொண்டு வரும் இத்தகைய சட்டங்களை விமர்சிப்பது கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், பல்வேறு தரப்பினரும் பல்வேறு வழிகளில் நாட்டை அழிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக எந்த சந்தர்ப்பத்தையும் வழங்கப்போவதில்லை. இனங்களுக்கிடையில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே அரசாங்கத்துக்கு தேவையாக இருக்கிறது. அதேபோன்று மஹாநாயக்க தேரர்கள் உட்பட அனைவரதும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கருத்திற்கொண்டு புதிய பயங்கரவாத சட்டமூலத்துக்கான திருத்தங்களை உள்ளடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைவரதும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கருத்திற்கொண்டு இந்த சட்டமூலத்தை அனுமதிப்பது பொருத்தம் என மஹாநாயக்க தேரர்கள் உபதேசித்தார்கள் என்றார்.