உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு நினைவு தின விசேட ஆராதனைகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அனுஷ்டிக்கப்பட்டது.
13 மணித்தியால நடை பவனி
நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (20) இரவு 7 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனியானது, இன்று வெள்ளிக்கிழமை (21) காலை 8.20 மணிக்கு கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலம் முன்பாக நிறைவடைந்தது. ஏறக்குறைய 38 கிலோ மீற்றர் தூரம் உடைய இந்த நடைபவனியானது, சுமார் 13 மணித்தியாலங்கள் நீடித்திருந்தது.
இந்த நடை பவனியில் பங்கேற்றவர்கள் செபமாலை உச்சரித்தும், வேத பாடல்களை பாடியும் ஆன்மீக ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புனித அந்தோனியார் மற்றும் புனித செபஸ்தியார் ஆகியோரின் திருவுருங்களை தாங்கிய அலங்கரிக்கப்பட்ட தேரும் கட்டுவப்பிட்டியிலிருந்து கொச்சிக்கடைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
‘மனிதச் சங்கிலிப் போராட்டம்’ வேலைத்திட்டத்தில் பலரும் பங்கேற்பு
கொழும்பு மறை மாவட்டத்தின் கொழும்பு நகரத்திற்குட்டபட்ட கத்தோலிக்க தேவாலயங்களிலிருந்தும் கத்தோலிக்கர்கள் பலரும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இணைந்து உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கோரி என பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு பெளத்த, இஸ்லாம், மற்றும் இந்து மதத்தினரும் இணைந்திருந்தமை விசேட அம்சமாகும்.
பலியானவர்கள் நினைவு கூரல்
மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் திருத்தலத்தில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வின்போது, ஆலய முன்றலில் காலை 8.45 மணிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து, ஆலய மணியோசையும் எழுப்பப்பட்டது.
சர்வ மத பிரார்த்தனை
சர்வ மத பிரார்த்தனையுடன் நடைபெற்ற இந்த நினைவு தின நிகழ்வில், பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிறையன் உடைக்வே, ஓமல்பே சோபித்த தேரர் உள்ளிட்ட தேரர்கள், மெளலவி அப்துல் ரஹ்மான், பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயம் பிரதம குருக்கள் சிவ சுரேஷ், இலங்கை அங்கிலிக்கன் திருச்சபைத் தலைவர் ஆயர் துஷான்த்த றொட்ரிகோ, இலங்கை மெதடிஸ்த திருச்சபைத் தலைவர் எபினேசர் ஜோசப் உள்ளிட்ட ஏனைய கிறிஸ்தவ மத தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். மேலும், பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்பு
பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை பிரதிநிதித்துவப்படுதும் உயர்ஸ்தானிகர்கள், ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள் என வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
மெழுவர்த்தி ஏந்தல்
கொச்சிக்கடை புனித அந்தோனியர் திருத்தலத்தில் பலியானவர்களின் பெயர்கள் தாங்கிய நினைவேந்தில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பிறையன் உடைக்வே, கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித், அருட் தந்தையர்கள், சகல மதத் தலைவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் மெழுகுதிரிகளை ஏந்தினர் அன்னாரது ஆத்ம இளைப்பாற்றிற்காக வேண்டினர்.
அபேக்ஷா வைத்தியசலைக்கு மருத்துவ உபகரணம் கையளிப்பு
நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட நிதியைக் கொண்டு புற்றுநோயால் அவதியுறும் நோயாளர்களிள் மருத்துவ சிகிச்சைக்களுக்கான 78 இலட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணத்தை மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் வைத்தியர்களான ரொஷான் அமரதுங்க மற்றும் குமாரி வாஸ் ஆகியோரிடம் கையளித்தார்.
நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுப்பு
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் பலியானவர்களுக்கான நினைவுத் திருப்பலி காலை 11 மணிக்கு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் ஆகியோரினால் கூட்டாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற நினைவுத் திருப்பலியை கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர்களான மெக்ஸ்வெல் சில்வா, அன்தனி ஜயக்கொடி ஆகியோரினால் காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கொழும்பு மறை மாவட்டத்திலுள்ள சகல தேவாலயங்களிலும் நாட்டிலுள்ள பிரதான சில கத்தோலிக்க தேவாலயங்களிலும் காலை 7 மணிக்கு நினைவுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
சீயோன் தேவாலயத்திலும் ஆராதனை
மட்டக்களப்பு சீயோன் தேவாலய போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் இன்று காலை 8 மணி முதல் 9 மணி வரை விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்ததுடன், செப தோட்டமொன்றும் திறந்து வைக்கப்பட்டது.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களில் 272 பேர் பலியானதுடன், 500 இற்கும் அதிகமானோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

