எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்

90 0

எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன  இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. இவ்வாறு மக்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒற்றுமை மற்றும் ஐக்கியத்தை மோசடி அரசியல்வாதிகளால் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நாட்டு மக்கள் அனைவரிடமும் வலியுறுத்தினார்.

மக்களின் ஜனநாயக உரிமைகள், மக்களின் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை நசுக்கி, ஏகாதிபத்தியமாக நடந்துகொண்டு, மக்கள் இறைமையான்மையை உதைத்து தள்ளுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற எம் நாட்டின் தற்போதைய ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைக்கொள்ள முடியாது.

பணப்பரிசு கிடைத்தால் மாத்திரமே சந்தோஷப்பட்டு பட்டாசுகளை கொழுத்துவார்கள். கடன் பெற்றுக்கொண்டதற்காக பட்டாசுகளை கொழுத்துவது எந்த நாட்டில் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குல்கள் சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான நான்காவது ஆண்டு நினைவு தின வைபவத்தில் கலந்துகொண்டு கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

” கொழும்பு கொச்சிக்கடை திருத்தலம், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் ‍தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள்,  கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்துவதற்காக வந்திருந்தவர்கள் மற்றும் அங்கு தொழில் புரிந்தவர்கள் என 272 பேர் பலியாகியதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரும் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு பலியானவர்கள் தங்களது தாய், தந்தை, உடன் பிறப்புகள் மற்றும் உறவினர்களை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ஆறுதல் கிடைக்க வேண்டும்படியும்,  காயமடைந்தவர்கள்  விரைவாக சுகமடைய வேண்டும்படியும் நான் கடவுளிடம் மன்றாடுகின்றேன்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் அசம்பாவித சம்பவத்தின் ஊடாக இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமை அடைந்துள்ளனர். எம்நாட்டு மக்கள் மத்தியில் தனித்துவமான சிறந்த சிந்தனையொன்று தோற்றம் பெற்றுள்ளது. இதன் பலனாக அரசியல் தேவைகளுக்காக நாட்டில் இன முறுகல்களையும், குரோதங்க‍ளையும் உருவாக்கி தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கின்ற அரசியல்வாதிகள் எண்ணங்களும், செயல்பாடுகளும்  தோற்கடிக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குல்கள் நடத்தப்படப்போவதாக  இந்திய புலனாய்வுத்துறையினரால் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு நான்கு  சந்தர்ப்பங்களில் முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும், அதனை தடுக்காமல் இருப்பதற்கு எந்தவித முயற்சிகளும் எடுக்காதது ஏன்?

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையின் முழுமையான அறிக்கையை இதுவரையில் பொது மக்களின் பார்வைக்கு வழங்காது உள்ளனர். அவ்வாறு அதனை வெளியிடாமல் இருப்பது, தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் ஆகும். குறைந்த பட்சம் அதிலுள்ள  பரிந்துரைகளை கூட  செயல்படுத்தாது உள்ளனர்.

கட்டுவப்பிட்டிய தேவாலய  தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்டவரின் மனைவியும் சாய்ந்தமருது  தற்கொலை குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவரான சாரா ஜெஸ்மின் எனும் புலஸ்தினி ராஜேந்திரன் இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருந்தாக கூறப்பட்டு வந்த நிலையில், அவரின் டி.என்.ஏ. பரிசோதனையை மூன்றாவது தடவையாக  பரிசோதிக்குமாறு உத்தரவிட்டது யார்? அவர்தான்  உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் தொடர்புபட்டவர் என தெரிய வருகிறது ” என்றார்.