ஜம்இய்யதுல் உலமா சபை பொலிஸ்மா அதிபருக்கு எழுதிய அவசர கடிதம்

177 0

அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிந்து சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்கும் தீய சக்திகளை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

அக்குறணை பிரதேசத்தில் குண்டுதாக்குதல் தொடர்பாக வெளிவந்த தகவல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபையின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸிம் மற்றும் பதில்  தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா ஆகியோர் கைச்சாத்திட்டு பொலிஸ்மா அதிபர் சந்தன டி விக்கிரமரத்னவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கண்டி, அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படலாம் என தங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து, கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர், அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடத்தி குறித்த தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக் கொண்டு வரவேண்டும்.

அத்துடன் சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வைச் சீர்குலைக்கும் தீய சக்திகளை அடையாளங்கண்டு அவற்றைத் தடுத்து நிறுத்தி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும், முஸ்லிம்களின் பாதுகாப்பு தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அத்துடன் மேற்படி தகவல் தொடர்பில் மிக அவதானமாக நடந்துகொள்ளுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரையும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கிறது.