ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், நோர்வே மற்றும் சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) இந்திய நாடாளுமன்ற குழுவின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து கலந்துரையாடினர்.
அப்பிரதிநிதிகளை வரவேற்ற ஓம் பிர்லா, இதன்போது இந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு இந்தப் பயணம் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவும், ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளும் உலக அமைதி, அகிம்சை, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களுக்கு பொதுவான உறுதிப்பாட்டை பகிர்ந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்தியா மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு நிலை சமீப காலமாக வளர்ச்சி பெற்றுள்ளன என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அவர், மேலும் அத்தொடர்பினை விரிவுபடுத்தி, இந்த உறவு நிலையை முன்னெடுத்துச் செல்ல மக்களிடையேயும் தொடர்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டின்போது, பிரதமர் நரேந்திர மோடி, ஐஸ்லாந்து மற்றும் நோர்வே பிரதமர்களுடன் கலந்துரையாடியதைக் குறிப்பிட்ட பிர்லா, இந்த பயணம் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் வணிக உத்வேகத்துக்கு ஊக்கமளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அறிவியல், வங்கி, காப்பீடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மீன்பிடி, கடல் போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்க நாடுகளின் நிபுணத்துவத்தை பற்றி குறிப்பிட்ட பிர்லா, இந்தியாவும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கமும் குறிப்பிட்ட இத்துறைகளில் தத்தமது ஒத்துழைப்பை மேம்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

