பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரம் தலைதூக்க இடமளிக்க முடியாது

153 0

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் ஊடாக சர்வாதிகாரத்தை தலை தூக்கச் செய்வதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மக்களின் உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (20 ) விசேட அறிவிப்பொன்றை விடுத்து இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிராக செயற்படுவதற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இது மிகவும் அபாயம் மிக்க சட்ட மூலம் என்று மல்வத்து பீடம் தெரிவித்துள்ளது.

அரச பயங்கரவாதத்தின் ஊடாக மக்களின் ஜனநாயக உரிமையை சீரழிப்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கமாகும்.

அரசாங்கத்தின் இந்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அனைத்து தரப்பினரையும் நாம் ஒன்றிணைத்துக் கொண்டிருக்கின்றோம். பாராளுமன்றத்திலும் இந்த சட்ட மூலத்தை தோல்வியடைச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்போம்.

மக்களின் உரிமைகளை இல்லாதொழிப்பதற்கே அரசாங்கம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சித்து வருகிறது. ஒருபுறம் தேர்தலை நடத்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. தேர்தலுக்கு நிதி வழங்குவதை இடை நிறுத்தியுள்ளது.

மறுபுறம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் பயங்கரவாத சட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கப்படுகிறது.

இதே நிலைமை தொடருமானால் நாட்டில் சர்வாதிகார போக்கு தலைதூக்கும். மக்கள் ஆணையுடன் பெற்றுக் கொள்ள முடியாத அதிகாரத்தை, பலவந்தமாகப் பெற்றுக் கொள்வதே ஜனாதிபதியின் ஒரே இலக்காகும்.

இதற்கு இடமளிக்க நாம் தயாராக இல்லை. நாட்டிலுள்ள அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து மக்களின் உரிமைகளை முடக்கும் முயற்சிகளை முறியடிப்போம் என்றார்.