தேசிய அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமைந்தால் அதனை முழுமையாக ஏற்போம்

162 0

நல்லாட்சியின் தேசிய அரசாங்கத்தை போல் மீண்டும் ஒரு தேசிய அரசாங்கம் தோற்றம் பெற கூடாது. தேசிய அரசாங்கத்தில் பொறுப்பு கூறும் தரப்பு ஒரு அதிகாரத்தை மையப்படுத்தியதாக காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் வியாழக்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உரிமைகளுக்காக போராடும் தரப்பினர் தங்களின் கடமைகளை மறந்து விடுகிறார்கள்.உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலகியுள்ள தரப்பினர் தங்களின் அடிப்படை கடமைகளை மறந்து விட்டதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் வீழ்ச்சியடைந்த கல்வி நிலை தொழிற்சங்க போராட்டங்களினால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வி சேவையில் ஏற்படும் பாதிப்பை குறுகிய காலத்திற்குள் சீர் செய்ய முடியாது என்பதை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் போராசிரியர்கள், கலாநிதிகள் நன்கு அறிவார்கள். தங்கள் சுயநல தேவைகளுக்காக மாணவர்களின் எதிர்காலத்தை சவாலுக்குட்படுத்துவது கவலைக்குரியது.

தேசிய அரசாங்கம் தற்போது பிரதான பேசுபொருளாக உள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தேசிய அரசாங்கத்தை அமைக்க வேணடும் என்ற நிலைப்பாட்டை முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தோற்றுவித்தார்.

தேசிய அரசாங்கம் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக அமையுமாக இருந்தால், அதனை முழுமையாக ஏற்போம்.

கட்சி என்ற ரீதியில் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம்.சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அமைக்கும் தேசிய அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கத்தின் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தை போல் அமைய கூடாது.

நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி,பிரதமர் ஆகிய இருவருக்கும் இடையில் காணப்பட்ட அதிகார போட்டித்தன்மை மீண்டும் தோற்றம் பெற கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம். தேசிய அரசாங்கத்தில் பொறுப்பு கூறும் தரப்பு ஒரு அதிகாரத்தை மையப்படுத்தியதாக காணப்பட வேண்டும் என்றார்.