நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படும்போது ஆட்சியாளர்கள் இரண்டுவகையான உபாயங்களை பையாள்வார்கள்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கான வழிவகைகளை செய்துவருவது அதில் ஒருவகையாகும்.
அதற்காகவே தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்த கருத்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் போராட்டத்தை அடக்கும் வகையில் அமைந்துள்ளது என களனி பல்கலைக்கழக வருகை தரு விரிவுரையாளர் எஸ்.சிவகுருநாதன் தெரிவித்தார்.
ஜனநாயகத்துக்கான சிவில் சமூக கூட்டமைப்பு வியாழக்கிழமை (20) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச்சட்டம் 1979ஆம் ஆண்டு வடக்கில் இருக்கும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுவதாக தெரிவித்தே கொண்டுவரப்பட்டது. ஆனால் சுமார் 44 வருடங்களாக இந்த சட்டம் இருந்து வருகிறது.
இந்த சட்டத்தினால் தமிழ் மக்கள் எவ்வாறு அடக்கி ஒடுக்கப்பட்டார்கள் என்பது அந்த மக்களுக்கு தெரியும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 3பேர் 14 வருடங்களுக்கு பின்னர் அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தார்கள்.
ஆனால் தற்போது அரசாங்கம் வர்த்தமானிப்படுத்தி இருக்குகம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் பயங்கரவாத தடைச்சட்டத்தைவிட பயங்கரமானது.
ஏனெனில் உத்தேச சட்டமூலத்தில் பயங்கரவாதத்துக்கு சரியான வரைவிலக்கணம் தெரிவிக்கப்படவில்லை. பொதுவாக உலகில் எங்கும் பயங்கரவாதம் என்றால் இதுதான் என விரைவிலக்கணம் தெரிவிக்கப்பட்டதி்லலை.
அதனால் ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால் அதனை பயங்கரவாதம் என தெரிவித்து அவர்களை கைதுசெய்ய முடியுமான நிலை இந்த சட்டமூலத்தின் ஊடாக முடியுமாகிறது.
அத்துடன் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படும்போது ஆட்சியாளர்கள் இரண்டுவகையான உபாயங்களை பையாள்வார்கள். அதாவது, பொது மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடல்களை ஏற்படுத்தி, பிரச்சினைக்கு தீர்வுகாண்பது.
அடுத்ததாக பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அடக்குமுறை கையாள்வதாகும்.
அதன் பிரகாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தற்போது அடக்குமுறையை பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கான வழிவகைகளையே செய்துவருகிறது. அதற்காகவே தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்தை அடக்கும் வகையில் நேற்று முன்தினம் கருத்து தெரிவித்திருந்தார்.
தொழிறசங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை ஒருவாரத்துக்குள் முடிவுக்கு கொண்டுவராவிட்டால் அந்த தொழிற்சங்கங்களை தடைசெய்வேன், அவர்களின் சேவையை அத்தியாவசியமாக பிரகடனப்படுத்துவேன், குறித்த தொழிசங்க தலைவர்கள் அல்லது உறுப்பினர்களது தனிப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவேன் என தெரிவித்திருந்தார்.
இது தொழிற்சங்கங்களை அச்சுறுத்தும் நடவடிக்கையாகும். பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனுமதிக்கப்பட்டால் இவ்வாறான நிலையே ஏற்படும்.
எனவே நாட்டில் மக்களின் ஜனநாயகம், அடிப்படை உரிமைகளை மீறும் வகையிலேயே பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும்விட பயங்கரமானது. அதனால் இந்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ்பெற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் கொடுக்கவே சிவில் அமைப்பினர் ஒன்றுபட்டுள்ளனர் என்றார்.

