உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதம்

157 0

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளோம்.

பத்து நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிட்டால் ஒட்டுமொத்த பெற்றோரையும் வீதிக்கிறக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது என அகில இலங்கை பெற்றோர் சங்கத்தின் தலைவர் இந்திக ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வியாழக்கிழமை (20) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

குரங்குகளை சீனாவுக்கு அனுப்பும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போர் கொடி உயர்த்தும் சிவில் அமைப்பினர் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகுவது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை. இதனை மனித உரிமை மீறல் செயற்பாடாகவும் அவர்கள் கருதாமல் இருப்பது கவலைக்குரியது.

வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் இருந்து விலகியுள்ளார்கள்.

அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ளும் பிரச்சினைகளுக்கு இவர்கள் மாணவர்களை பகடைகாயாக்குவது எந்த விதத்தில் நியாயமாகும்.

கொவிட் பெருந்தொற்று தாக்கத்தினால் சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளை நடத்துவதில் ஏற்கெனவே ஒருவருட காலம் தாமதம் காணப்படுகிறது.இவ்வாறான பின்னணியில் தொழிற்சங்க போராட்டத்தினால் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமானால் தேசிய பரீட்சைகள் தொடர்ந்து தாமதமாகும்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்பதில் மனித உரிமைகள் ஆணைக்கு தலையிட வேண்டும் என்பதற்காகவே  ஆணைக்குழுவை நாடியுள்ளோம்.தொழிற்சங்க போராட்டத்தால் எமது பிள்ளைகளின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன.உரிய காலத்திற்குள் கல்வி செயற்பாடுகளை அவர்களால் முழுமைப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைவாக நிறைவு செய்து பரீட்சை பெறுபேற்றை விரைவாக வெளியிடுமாறு உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.பத்து நாட்களுக்குள் தீர்வு கிடைக்காவிடின் ஒட்டுமொத்த பெற்றோரையும் வீதிக்கு இறக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம்.எமது பிள்ளைகளின் எதிர்காலம் எமக்கு முக்கியம்.பேராசிரியர்கள் அவர்களின் பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.