தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, வடமத்தியமாநிலம் ஆன்ஸ்பேர்க்.

557 0

யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 16.4.2023 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும், 20ஆண்டுகள் பணிநிறைவிற்காக, தமிழ் வாரிதி மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக, தமிழ்மாணி எனப் பட்டமளிப்புமாக அரங்கம் அணிசெய்தமை சிறப்பு. பட்டமளிப்புகளைச் சுட்டுவதாயின் பலபக்கங்கள் எழுதலாம். அவை ஒவ்வொன்றும் விழாவுக்குள் விழாவாக நகர்ந்தமை பாராட்டிற்குரியது.

விழாவின் மகுடமாக முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்கான மதிப்பளிப்பு அமைந்தது. விழாவுக்குள் விழாவாகப் பவளவிழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் தன்னோடு இணைந்து பயணிக்கும் மூத்தோருக்கு மதிப்பளிக்கும் வகையிற் செயலாக்கியுள்ளது.

வேற்றுமொழிச் சூழலுள் தமிழோடு பயணிக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத முயற்சியும் ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய்த் துலங்கியது. அகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும் பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த்திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் தமதாக்கிய வெற்றிக்கனிகளின் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. நிறைவாக நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு வடமத்திய மாநிலத்திற்கான அகவை நிறைவு விழா நிறைவுற்றது.