குரங்குகள் மீது கருணை கொள்ளும் நிபுணர்கள் விவசாயிகள் மீதும் கருணை கொள்ள வேண்டும்

150 0

குரங்குகள் மீது கருணை கொள்ளும் சுற்றாடல் துறை நிபுணர்கள் விவசாயிகள் மீதும் கருணை கொள்ள வேண்டும். கொழும்பில் இருந்து கொண்டு முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தால் விவசாயிகளுக்கும்,சுற்றாடற்துறை நிபுணர்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெறும். ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு வழங்குவது வரவேற்கத்தக்கது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சீனாவுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவது வரவேற்கத்தக்கது.குரங்கு,மயில்,யானை உள்ளிட்ட காட்டு விலங்குகளால் விவசாய பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நன்கு அறிவார்கள். கொழும்பில் இருந்து கொண்டு கருத்துரைக்கும் சுற்றாடற்துறை நிபுணர்கள் இதனை அறியமாட்டார்கள்.

குரங்குகள் மீது கருணை கொள்ளும் சுற்றாடல் துறை நிபுணர்கள் விவசாயிகள் மீதும் கருணை கொள்ள வேண்டும். கொழும்பில் இருந்து கொண்டு முரண்பட்ட கருத்துக்களை சுற்றாடல் துறை நிபுணர்கள் முன்வைத்தால் விவசாயிகளுக்கும்,சுற்றாடற்துறை நிபுணர்களுக்கும் இடையில் முரண்பாடு தோற்றம் பெறும்.

மொத்த விவசாய உற்பத்தியில் பெரும்பாலான பகுதியை காட்டு விலங்குகள் நாசம் செய்கின்றன.குரங்குகளை சீனாவுக்கு அனுப்புவதை தடுப்பவர்கள் மாற்றுத் திட்டத்தை குறிப்பிட வேண்டும். ஏதாவதொரு வழிமுறையில் குரங்கு தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பெரும்பாலான விவசாய மாகாணங்களில் வாழும் மக்கள் காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்பை நன்கு அறிவார்கள். குரங்குகளை கொல்வதற்காக சீனாவுக்கு அனுப்பவில்லை. சீனாவில் உள்ள மிருககாட்சி சாலைக்காகவே குரங்குகள் கோரப்பட்டுள்ளன என்பதை சுற்றாடல் துறை நிபுணர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.