ரணில் உருவாக்கிய குண்டு கோட்டா கைகளில் வெடித்தது

149 0

நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில்  விக்கிரமசிங்க உருவாக்கிய அரசமுறை கடன் என்ற  குண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கைகளில் வெடித்தது.

தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்த பொது கொள்கை திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பிவிதுரு ஹெல உருமய அலுவலகத்தில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசமுறை கடன் சுமை தீவிரமடைந்ததால் நாடு வங்குரோத்து நிலை அடைந்தது. பெற்றுக்கொண்ட அரசமுறை கடன்களை மீள செலுத்த முடியாத நிலை காணப்படும் பின்னணியில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தொடர்ந்து கடன் பெறுவது எவ்வாறான பொருளாதார கொள்கை என்பதை பொருளாதார நிபுணர்கள் ஆராய வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் எவ்வித அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுக்காமல் அரசமுறை கடன்களை வரையறையில்லாமல் பெற்றது.

2015-2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மாத்திரம் சர்வதேச பிணைமுறிகளி;டமிருந்து 10 பில்லியன் டொலருக்கும் அதிகமான கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொண்ட அரசமுறை கடன் என்ற குண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் வெடித்தது.உரம் தொடர்பில் கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தவறான தீர்மானம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வெளிநாட்டு கடன்களை வரையறையின்றி பெற்றால் அது எதிர்காலத்துக்கு பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் தோற்றம் பெறுகின்ற பின்னணியில் தேசிய அரசாங்கத்தில் எவ்வாறு ஒன்றிணைவது.தேசிய அரசாங்கத்தை அமைக்க முன்னர் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் பொது கொள்கை திட்டத்தை ஜனாதிபதி முன்வைக்க வேண்டும். அந்த திட்டம் சர்வதேச நாணய நிதியத்தை மையப்படுத்தியதாக இருக்க கூடாது என்றார்.