புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு 100 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள், வன்னி ஹோப் நிறுவனத்தினால் நேற்று (18) வழங்கப்பட்டன.
குறித்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம். ரீ. எம். பாரிஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நாட்டில் நிலவி வருகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு திருகோணமலை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் புனித நோன்புப் பெருநாளை கொண்டாட இருக்கும் மக்களுக்கு உணவுப் பொதிகளை வழங்குமாறு, வன்னி ஹோப் நிறுவனத்திடம் விசேட வேண்டுகோள் விடுத்தது.
அதன் அடிப்படையில் வன்னி ஹோப் நிறுவனத்தின் அவசர கால நிவாரண செயற்றிட்டத்தின் கீழ், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழுகின்ற 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக புனித நோன்புப் பெருநாளை கொண்டாடும் வகையில், அரிசி, கோதுமை மற்றுமு் சீனி போன்ற அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

