உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்கும் சஜித் பிரேமதாச உட்பட பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார்கள்.
இந்த இரண்டு சட்டமூலங்களில் இருக்கும் பொருத்தம் இல்லாத விடயங்களை இவர்கள் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் புதன்கிழமை (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு பாரிய எதிர்ப்பை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2018 செப்டம்பர் 17ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பித்தபோது அதற்கு தற்போதைய எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, ராஜித்த சேனாரத்ன,கபீர் ஹாசிம், தலதா அத்துகோரள சரத்பொன்சேகா மற்றும் சிலர் ஆதரவளித்திருந்தனர்.
தற்போது அரசாங்கம் வரத்தமானியில் வெளியிட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சரவைக்கு சமர்பித்திருந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயங்களுக்கும் என்ன வித்தியாசத்தை இவர்கள் காண்கின்றார்கள் என்பதை இவர்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
எவ்வாறு இருந்தபோதும் எமது நாட்டை முன்னேற்றுவதற்கு பிரதான தடையாக இருக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் இந்த சட்டமூலம் மிக முக்கியமாகும்.
அத்துடன் உத்தேச சட்டமூலத்தில் இருக்கும் பிரதான விடயம்தான், சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் பாரியளவில் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
நீதிவான் சந்தேக நபர் தொடர்பில் தேடிப்பார்ப்பார்த்தல், குறித்த சந்தேக நபரின் தகவல்களை நெருங்கிய சொந்தங்களுக்கு தெரியப்படுத்தல், கைதுசெய்யும் பொலிஸ் அதிகாரியை அறிமுகப்படுத்தல் அவர்களை பகிரங்கப்படுத்தல், போன்ற சந்தேக நபரின் பாதுகாப்புக்காக தேவையான பல நடவடிக்கைகளை கொண்டுள்ள இந்த சட்டமூலம் தேசிய பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானதாகும்.
உலகில் வேறு நாடுகளிலும் இந்த சட்டம் செயற்பட்டு வருவதுடன் இலங்கையிலும் தேசிய பாதுகாப்புக்காக இவ்வாறான சட்டமூலங்கள் தேவையாகும். குறிப்பாக நீண்டகாலமாக நாட்டுக்குள் திட்டமிட்டவகையில் நாட்டை செயற்திறமையை இல்லாமல் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் பயங்கரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவேண்டி இருக்கின்றன.
அதனால் நாட்டின் எதிர்காலத்துக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மிகவும் முக்கியமாகும். எதிர்க்கட்சி இதற்கு எதிர்ப்பு என்றால், அன்று ஆளும் கட்சியில் அமைச்சரவையில் இருந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு ஆதரவளித்த, தற்போதைய எதிர்க்கட்சியில் இருக்கும் சிலர் தற்போது இதனை எதிர்ப்பதாக இருந்தால், இவர்கள் தொடர்பில் மக்கள் சிந்தித்து செயற்படவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் உத்தேச சட்டமூலத்தை வாசித்துப்பார்த்து, அதில் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான சரத்துக்கள் இருக்குமானால் அவை என்ன என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பரேமதாச உட்பட அவருடன் இருப்பவர்கள் அன்று நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு ஆதரவளித்தார்கள் என்றால், தற்போது கொண்டுவந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்ப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்காகவா என கேட்கிறோம் என்றார்.

