இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கான பற்றரி நிலையங்களை ஸ்தாபிக்க அமெரிக்கா நிதியுதவி

214 0

இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மின்னேற்றப்பட்ட பற்றரி நிலையங்கள் இரண்டை ஸ்தாபித்து, நடாத்திச்செல்வதற்கு அவசியமான நிதியுதவியை சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் இலங்கைக்கு வழங்கவுள்ளது.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் கீழான இலங்கை சக்திவலு செயற்திட்டம் மற்றும் ஸ்லிங் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கிடையில் மேற்குறிப்பிட்ட நிதியுதவிக்கான இருதரப்பு ஒப்பந்தம் 18 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்நிதியுதவின் ஊடாகக் கொழும்பில் இலத்திரனியல் மோட்டார் சைக்கிள்களுக்கு அவசியமான மினனேற்றப்பட்ட பற்றரி நிலையங்கள் நிர்மாணிக்கப்படும்.

எனவே இலத்திரனியல் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அந்நிலையங்களுக்கு வருகைதந்து, மின்னிறக்கமடைந்த பற்றரியை வழங்கி, அதற்குப் பதிலாக மின்னேற்றப்பட்ட பற்றரியைப் பெற்றுச்செல்லமுடியும்.

இதன்மூலம் இலத்திரனியல் மோட்டார் வாகனத்துக்குரிய பற்றரியை மின்னேற்றம் செய்வதனால் அவ்வாகன உரிமையாளருக்கு ஏற்படும் நேரவிரயம் தவிர்க்கப்படும்.

அதன்படி இச்செயற்திட்டம் குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் செயற்திட்டப்பணிப்பாளர் கேப்ரியல் க்ரோ, ‘இலங்கை மக்களுடனான 75 வருடகால நல்லுறவு குறித்து நாம் பெருமிதமடைகின்றோம்.

அதேவேளை சூழலுக்கு நேயமானதும், செலவு குறைந்ததுமான உள்நாட்டு இலத்திரனியல் தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் செயற்திட்டங்களுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.