உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியிருக்கவில்லை.
முன்னாள் சட்டமா அதிபரைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டத்தரணி திமித்ர அபேசேகர புதன்கிழமை (19) காலை 9 மணியளவில் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் சதித்திட்டம் காணப்படுவதாக , ஓய்வு பெறும் சந்தர்ப்பத்தில் முன்னாள் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதாகியுள்ளமையின் அடிப்படையிலேயே அவரை பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பயங்கரவாத விசாரணைப்பிரிவில் முன்னிலையாகிருந்த சட்டத்தரணி திமித்ர அபேசேகர ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,
முன்னாள் சட்டமா அதிபருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் 7 பக்கங்கள் கொண்ட ஆட்சேபனை பயங்கரவாத விசாரணைப்பிரிவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் சட்டமா அதிபராக சேவையாற்றிய காலப்பகுதியில் 130 பக்கங்கள் கொண்ட ஆலோசனை அறிக்கையை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் தற்போதைய சட்டமா அதிபரிடமே கேட்டறிந்து கொள்ள வேண்டும். மாறாக முன்னாள் சட்டமா அதிபரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டிய தேவை கிடையாது என்றார்.

